2017-02-23 15:33:00

அருள்பணி லொம்பார்திக்கு பிரெஞ்சு அரசின் மிக உயர்ந்த விருது


பிப்.23,2017. பிரெஞ்சு அரசின் மிக உயர்ந்த விருதான, "Legión de Honor" என்ற விருது, வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனரும், இயேசு சபை அருள்பணியாளருமான ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்களுக்கு, பிப்ரவரி 22, இப்புதன் மாலை வழங்கப்பட்டது.

அருள்பணி லொம்பார்தி அவர்கள், திருப்பீடத்தின் எண்ணங்களையும், செய்திகளையும் உலகிற்கு தெளிவாக வழங்கியதற்காகவும், பிரெஞ்சு மொழிக்கு உரிய மதிப்பளித்ததற்காகவும், இவ்விருது வழங்கப்படுகிறதென்று, திருப்பீடத்திற்கென பணியாற்றும், பிரெஞ்சு நாட்டுத் தூதர், Philippe Zeller அவர்கள், இந்த விருது வழங்கும் விழாவில் கூறினார்.

தான் ஒரு கத்தோலிக்கர் என்றும், உலகக் குடிமகன் என்றும் கூறிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், பிரெஞ்சு, இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள Piedmont பகுதியில் தன் வேர்கள் உள்ளன என்று தன் ஏற்புரையில் கூறினார்.

தன் இளமைப் பருவத்தில் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு அடிக்கடி சென்று, நோயுற்றோருக்குப் பணிகள் ஆற்றியதை தன் உரையில் நினைவுகூர்ந்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், தான் இணைந்த இயேசு சபையை உருவாக்கியவர்களும், பிரெஞ்சு நாட்டுடன் தொடர்புகொண்டவர்கள் என்று குறிப்பிட்டார்.

வத்திக்கானில், திருத்தந்தைக்கென சிறப்பு பணியாற்றியதற்காக வழங்கப்பட்டுள்ள இவ்விருது, தனக்கு மட்டும் உரியதல்ல, மாறாக, தன்னோடு பணியாற்றிய அனைவருக்கும் உரியது என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

திருத்தந்தையின் குரலாகச் செயல்படும் வத்திக்கான் வானொலி வழியே, உலகின் பல்வேறு மொழிகளில், குறிப்பாக, பிரெஞ்சு மொழியில், திருத்தந்தையின் எண்ணங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளது தன் மனதுக்கு நிறைவைத் தந்த ஒரு பணி என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள், "Legión de Honor" விருதினை ஏற்ற வேளையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.