2017-02-22 15:57:00

புலம்பெயர்ந்தோர் மீது திருத்தந்தையின் அக்கறை, உலகறிந்தது


பிப்.22,2017. குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோர் ஆகியோரைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையை இவ்வுலகம் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, 'குடிபெயர்தலும், அமைதியும்' என்ற தலைப்பில், பிப்ரவரி 21, 22 ஆகிய இரு நாள்கள், உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

'அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தில், குடிபெயர்தல்' என்ற தலைப்பில், கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கிய உரையில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையில் ஓர் அங்கமான புலம்பெயர்ந்தோர் துறையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நேரடி பார்வையில் இணைத்துள்ளது, அவர் இப்பிரச்சனையில் காட்டும் அக்கறையை மேலும் உறுதிப்படுத்துகிறது என்று கூறினார்.

2016ம் ஆண்டு, வெளிவந்த Oxfam அறிக்கையின்படி, உலகின் 8 செல்வந்தர்கள் வைத்திருக்கும் சொத்து, 306 கோடி மக்களின் சொத்துக்கு இணையானது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், உலகெங்கும் வளர்ந்துவரும் வறுமை, குடிபெயர்தலுக்கும், புலம்பெயர்தலுக்கும் ஒரு முக்கிய காரணம் என்று எடுத்துரைத்தார்.

உலகின் பல பகுதிகளில் நிலவும் மோதல்களை, ஆயுத உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும், தங்கள் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது, வேதனை தரும் சுயநல போக்கு என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.