2017-02-22 15:35:00

புதன் மறைக்கல்வியுரை : இயேசுவின் கண் கொண்டு நோக்குவோம்


பிப்.22,2017. உரோம் நகரில் குளிர் குறைந்து ஓரளவு இதமான தட்ப வெப்பநிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, திருத்தந்தையின் இவ்வார புதன் மறைக்கல்வி உரை, மீண்டும் தூய பேதுரு பேராலய வளாகத்தில் இடம்பெறத் துவங்கியது. முதலில் தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் 8ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட, 'அனைவரும் மீட்படைந்துள்ளோம் என்பதை நம் நம்பிக்கை வழியாகக் கண்டு கொள்வோம்' என்ற தலைப்பில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மால் உடமையாக்கப்பட்டு, நம் சுயநலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒன்று என்ற கருத்தையும் தாண்டி, படைப்பு என்பது இறைவனின் கொடை, அது இறைவனின் அன்புத் திட்டத்தை நமக்கு வெளிப்படுத்துகின்றது என்பதை நினைவூட்டுகிறார் தூய பவுல். ஆனால், நாமோ, சுயநலவாதிகளாக இருந்து, பாவங்களை ஆற்றும்போது, கடவுளோடு நாம் கொண்டிருக்கும் ஒன்றிப்பை முறிப்பது மட்டுமல்ல, மனித இயல்பு, மற்றும், இயற்கையின், அழகையும் களங்கப்படுத்துகிறோம். அவ்வாறு நடப்பதன் வழியாக, நாம் கடவுளின் முடிவற்ற அன்பை வெளிப்படுத்துவதற்கு மாறாக, மனிதகுல வீண்பெருமையின் காயங்களை, இறைவனின் படைப்பாம் இயற்கைத் தாங்கும்படியாகச் செய்கிறோம். இருப்பினும், கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை. அவர் நமக்கு, விடுதலை மற்றும் மீட்பு குறித்த ஒரு புது உதயத்தைத் தருகிறார். இந்த உண்மையையே தூய பவுலும் நமக்கு நினைவூட்டுகிறார். அனைத்து மக்களும், படைப்பும், ஏன், நம் இதயங்களில் குடியிருக்கும் தூய ஆவியும், வேதனையுற்று தவிப்பதைப் பற்றிக் கூறுகிறார். இந்த வேதனைக் குரல்கள் பயனற்றவை அல்ல, ஆனால், இவை, பேறுகால வேதனைக் குரல்கள், அதாவது, புதியதொரு வாழ்வுக்கு முன் எழும் குரல்கள். நம் பாவங்கள் மற்றும் தவறுகள் குறித்த அடையாளங்கள் இருப்பினும், நாம் கடவுளால் மீட்கப்படுகிறோம் என்பதை அறிவோம். அது மட்டுமல்ல, உயிர்த்தெழுதல் மற்றும் புதுப்படைப்பு குறித்த எண்ணற்ற அடையாளங்கள் நம்மை சுற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதைக் குறித்தும் நாம் இப்போதும் தியானிக்கிறோம், மற்றும், அனுபவிக்கிறோம். நம்மையும், தன் படைப்பனைத்தையும் முற்றிலுமாக குணப்படுத்தி, அவரன்பில் ஒப்புரவாக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார் என்பதையும் நாம் அறிவோம். நம்மையும், இவ்வுலகையும் இயேசுவின் கண்கொண்டு உற்று நோக்குவோம். நாம் மனத்தளர்ச்சியுறும்போதும், எழும்பவே முடியாது என்ற சோதனைக்கு உள்ளாக்கப்படும்போதும், தூய ஆவியானவர் நம் துணைக்கு வருவார் என்பதை நினைவு கூர்வோம். தூய ஆவியானவரே, இறைவனை நோக்கிய நம் கூக்குரலை உயிரூட்டமுள்ளதாக வைத்திருக்கவும், நமக்காக அவர் தயாரித்துள்ள புதிய வானம், மற்றும் புதிய பூமியை நமக்கு வெளிப்படுத்தவும் உதவுகிறார்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் சூடான் நாட்டிற்காக விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார். சகோதரத்துவ மோதல்களால் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் தென் சூடானில் ஏற்பட்டுள்ள பஞ்சமும் இணைந்து எண்ணற்ற குழந்தைகள் உட்பட, பல இலட்சக்கணக்கானோரின் உயிரிழப்புகளுக்கு காரணமாகி வருகின்றன. இத்தகைய செய்திகள் பெரும் வேதனையைத் தருவதாக உள்ளன. இவ்வாறு துன்பங்களை அனுபவிக்கும் தென் சூடான் மக்கள் குறித்த அறிக்கைகளோடு நிறுத்திவிடாமல், அவர்களுக்காக முன்வந்து உணவு உதவிகள் உட்பட அனைத்து உதவிகளையும் ஆற்றவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உதவும் மக்களுக்கு, இறைவன் தன் ஊக்கத்தையும் பலத்தையும் வழங்குவாராக என தென் சூடான் மக்கள் சார்பில் விண்ணப்பம் ஒன்றை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வி உரைக்கு முன்னால், பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களிடையே தங்கள் சாகசங்களைச் செய்து காட்டிய Rony Rollers Circus கலைஞர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார். அங்கு குழுமியிருந்த அனைவருக்கும், குறிப்பாக இந்தியா, இங்கிலாந்து, அயர்லாந்து நார்வே, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்திருந்த அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வெளிட்டதுடன், அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.