2017-02-22 16:04:00

சிலே நாட்டில், இன்னும் அதிகமாக ஒப்புரவு தேவைப்படுகிறது


பிப்.22,2017. மத நம்பிக்கையற்ற வழியில் செல்வோரை, மீண்டும் நற்செய்தி வழிக்குக் கொணர்வது குறித்து, திருத்தந்தையுடன் தாங்கள் பேசியதாக, சிலே நாட்டு கர்தினால் ரிகார்தோ எஸ்ஸாத்தி ஆந்திரெல்லோ (Ricardo Ezzati Andrello) அவர்கள் வத்திக்கான் தொடர்புத் துறைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சிலே நாட்டில் பணியாற்றும் ஆயர்கள், பிப்ரவரி 20, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட ‘அத் லிமினா’ சந்திப்பு, ஏறத்தாழ 3 மணி நேரங்கள் நீடித்த ஓர் உரையாடலாக இருந்ததென்று, சந்தியேகோ பேராயர், கர்தினால் ஆந்திரெல்லோ அவர்கள் கூறினார்.

சிலே மக்கள் அன்னை மரியா மீது, குறிப்பாக, கார்மேல் அன்னை மீது கொண்டிருக்கும் பக்தி, அருள்பணிக்கென தங்களையே அர்ப்பணித்திருக்கும் இளையோரின் பயிற்சி, வயது முதிர்ந்தோர் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகிய கருத்துக்கள், தங்கள் உரையாடலில் இடம்பெற்றன என்று கர்தினால் ஆந்திரெல்லோ அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

சர்வாதிகாரி ஒருவரின் பிடியிலிருந்து சிலே நாடு விடுதலை அடைந்து 40 ஆண்டுகள் முடிந்தும், இன்னும் தங்கள் நாட்டில் ஒப்புரவு தேவைப்படுகிறது என்பதைக் குறித்து, திருத்தந்தையும், ஆயர்களும் தங்கள் கவலையை வெளியிட்டனர் என்று, கர்தினால் ஆந்திரெல்லோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.