2017-02-20 16:26:00

நீதியான செயல்களை ஆற்றும் கடமை கிறிஸ்தவர்களுக்குரியது


பிப்.20,2017. பகைமை மற்றும் வன்முறை உணர்வுகளை வெளிப்படுத்தி, பழிவாங்கலைத் தேடி ஓடாமல், நீதியான செயல்களை ஆற்றும் கடமை மட்டுமே கிறிஸ்தவர்களுக்குரியது என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் மலைப்பொழிவில் கூறப்படும் பழிவாங்குதல், பகைவரிடம் அன்பாயிருத்தல் என்பவைப் பற்றிய இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து, தன்  மூவேளை செப உரையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற பழிவாங்கலைத் தாண்டிச் செல்வது, இயேசுவின் அன்புச் சட்டம் என்பது மட்டுமல்ல, அது, ஒரு கிறிஸ்தவப் புரட்சி என்று கூறினார்.

தீமைக்கு எதிராக தீமையை ஆற்ற வேண்டும் என எதிர்பார்த்த காலத்தில், தீமைக்கு எதிராக நன்மையை ஆற்றவேண்டும் என இயேசு உரைப்பது, உண்மையான நீதியின் பாதை எனவும் கூறினார் திருத்தந்தை.

தீமை ஆற்றப்படும்போது, அங்கு ஒரு வெற்றிடம் உருவாகின்றது, அதற்கு ஈடாக இன்னொரு தீமை ஆற்றப்படும்போது, மேலும் வெற்றிடமே உருவாகும் என்பதால், நன்மை வழியாக அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமை செய்தோருக்காக செபிக்கும்படி இயேசு கூறுவது, அத்தீமையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதல்ல, மாறாக, தவறிழைத்தவர்களின் பலவீனம் உணர்ந்து, இறைத்தந்தையைப்போல் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்போது நாம் பெருந்தன்மையுடையவர்களாக மாறுகிறோம் என மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.