2017-02-18 14:34:00

திருத்தந்தை : நற்செய்திக்கு திறந்த மனதுள்ளவராய் இருங்கள்


பிப்.18,2017. அனைத்து மக்களும் புரிந்துகொள்ளும் மொழிகளில் நற்செய்தியை அறிவிப்பதும், நற்செய்திக்குச் சான்று பகர்வதும், இக்காலத்தின் பண்பாட்டுமயமாக்கலுக்கு, மாபெரும் சவாலாக உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்   கூறினார்.

Marianists என்றழைக்கப்படும், அமலமரியின் அருள்தந்தையர் துறவு சபையின் பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும், நாற்பது பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சபையை ஆரம்பித்தவரின் துணிச்சலான வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டார்.

ஏழை நாடுகளில், குறிப்பாக, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவிலுள்ள ஏழை நாடுகளில், இச்சபையினர் பணியாற்றி வருவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, எந்தவித வேறுபாடுமின்றி, எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்கச் செல்வதற்கு, முதலில், தனிப்பட்ட வாழ்விலும், குழு வாழ்விலும், மனமாற்றம் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

சபையை ஆரம்பித்தவரின் தனிவரத்திற்கும், சபையின் ஆன்மீக மரபிற்கும் பிரமாணிக்கமாய் இருப்பது குறித்தும், அதேநேரம், மக்களின் புதிய தேவைகளுக்குத் திறந்த மனதுள்ளவராய் இருப்பது குறித்தும் சிந்திக்குமாறும், Marianists சபையினரைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Marianists சபை, புனித இயேசு மரியின் ஸ்தனிஸ்லாவோ அவர்களால், 1673ம் ஆண்டில் போலந்தில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சபையினர், தற்போது இந்தியா உட்பட 26 நாடுகளில், பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.