2017-02-17 15:57:00

ரோமா த்ரே அரசு பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


பிப்.17,2017. புலம்பெயர்ந்த மக்கள், ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு ஆபத்தாக இல்லை, ஆனால், அம்மக்கள், சமுதாயங்கள் வளர்வதற்கு, சவாலாக உள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, இத்தாலிய பல்கலைக்கழக மாணவர்களிடம் கூறினார்.

உரோம் நகரிலுள்ள, ரோமா த்ரே என்ற, மூன்றாவது அரசு பல்கலைக்கழகத்திற்கு, இவ்வெள்ளி காலை பத்து மணியளவில் சென்று, ஏறக்குறைய இரண்டு மணி நேரம் அங்கிருந்து, மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டில், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவைப் பார்வையிட்ட பின், அங்கிருந்து அழைத்து வந்த சிரியா நாட்டு புலம்பெயர்ந்த பெண் Nour Essa அவர்கள், தற்போது, இத்தாலிய அரசின் உதவியுடன், இப்பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.

சிரியா மற்றும், ஈராக் நாடுகளின் புலம்பெயர்ந்த மக்கள், ஐரோப்பிய கிறிஸ்தவக் கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளனரா? என்று கேட்டதற்குப் பதிலளித்த திருத்தந்தை, தனது அர்ஜென்டீனா நாடும், குடியேற்றதாரர்களால் நிறைந்தது எனவும், குடியேற்றம் ஆபத்தாக இல்லையெனவும் தெரிவித்தார்.

மேலும், ரோமா த்ரே பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும், பணியாளர்களையும் சந்தித்தார் திருத்தந்தை. அச்சந்திப்பில் உரையாற்றிய திருத்தந்தை, அரசியல்வாதிகள், தங்களின் வாக்குவாதங்களைக் குறைத்து, ஒருவரை ஒருவர் புண்படுத்துவதை நிறுத்தி, உரையாடலுக்குத் திறந்த மனதுள்ளவர்களாய் செயல்படுமாறு கூறினார்.

45 நிமிடங்கள் ஆற்றிய இந்த உரையில், ஒருவரை ஒருவர் அவமதிப்பது, சாதாரண ஒரு காரியமாக மாறியுள்ளது, எனவே, பேச்சுக்களைக் குறைத்து, பிறருக்குச் செவிமடுப்பதை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

குடியேற்றதாரருக்கு எதிரான இயக்கங்கள் குறித்தும் எச்சரித்த திருத்தந்தை, புதிதாக நாட்டுக்கு வருகிறவர்களை, உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாக நடத்துமாறும் வலியுறுத்தினார்.

பொறுமையோடு உரையாடலில் ஈடுபடும் வழிகளைத் தேடுமாறும் கேட்டுக்கொண்ட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறருக்குத் திறந்த மனதுள்ளவராய் இல்லாதபோது, பிறரை மதிக்காதபோது, பிறரோடு உரையாடல் நடத்தாதபோது, போர்கள் நம் இதயங்களில் தொடங்குகின்றன எனவும் கூறினார்.

உரோம் புனித பவுல் பசிலிக்காவுக்கு அருகிலுள்ள இத்தாலிய ஆய்வுப் பல்கலைக்கழகமான ரோமா த்ரே (Roma Tre University), 1992ம் ஆண்டில், இத்தாலிய கல்வி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.  இது உரோம் நகரிலுள்ள மூன்றாவது அரசு பல்கலைக்கழகமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.