2017-02-17 16:10:00

மரண தண்டனை, ஏழைகளுக்கு எதிரான தண்டனை


பிப்.17,2017. பிலிப்பைன்ஸ் நாட்டில், மரண தண்டனை சட்டத்தை மீண்டும் அமல்படுத்த முயற்சிப்பது, பணமில்லாத ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையாக உள்ளது என, அந்நாட்டுத் தலத்திருஅவை அலுவலகர் ஒருவர் கூறினார்.

பிலிப்பைன்சின் Novaliches மறைமாவட்டம், பிப்ரவரி 18, இச்சனிக்கிழமையன்று, மனித வாழ்வுக்கு ஆதரவான நடைப்பயணத்திற்குத் தயாரித்துவருவதையொட்டி, CBCP கத்தோலிக்க செய்திக்குப் பேட்டியளித்த, அம்மறைமாவட்டத்தின் குடும்பம் மற்றும் வாழ்வு பணிக்குழுவின் Wayne Belizar அவர்கள், இவ்வாறு தெரிவித்தார்.

செல்வந்தர் மற்றும், அவர்களோடு தொடர்புடையவர்கள், குற்றவாளிகளாய் இருந்தாலும்கூட, பணத்தைக் காட்டி, பிணையலில் வெளிவர முடியும், ஆனால், ஏழைகள், குற்றவாளிகளாய் இல்லாமல் இருந்தாலும்கூட, அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார் Belizar.

தனது மறைமாவட்டம், மரண தண்டனைக்கு எதிராகப் போராடி வருகின்றது என்றும், மரண தண்டனை சட்டம் மீண்டும் அமலுக்கு வந்தால், பணமில்லாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார், Wayne Belizar.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.