2017-02-17 16:14:00

கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு - இலங்கை ஆயர்கள்


பிப்.17,2017. கருக்கலைப்பை சட்டப்படி அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு, கத்தோலிக்க அரசியல்வாதிகள் உட்பட, அனைத்துக் கத்தோலிக்கரும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு, இலங்கை ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

கருக்கலைப்பு சட்டத்திலுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு, இலங்கை அரசு அண்மை மாதங்களாக முயற்சித்து வருவதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை ஆயர் பேரவை, நாட்டின் அனைத்துக் கத்தோலிக்கருக்கும் இவ்வாறு, அழைப்பு விடுத்துள்ளது.

2016ம் ஆண்டின் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், இதேபோன்று அரசு முயற்சித்ததை முன்னிட்டு, அவ்வாண்டு ஆகஸ்ட் 18ம் தேதி, இலங்கை  ஆயர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து, நீதித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியதையும், ஆயர்களின் தற்போதைய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்குப் பதிலளித்த நீதித்துறை அமைச்சகம், இத்தகைய நடவடிக்கை குறித்து அரசு இன்னும் சிந்திக்கவே இல்லை எனவும், இந்த விவகாரத்தில் அரசு ஆர்வமாக இல்லையெனவும் கூறியதையும், ஆயர்களின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில், ஒவ்வோர் ஆண்டும், ஏறக்குறைய நான்கு இலட்சம் பெண்கள் கருத்தரிக்கின்றனர், இவர்களில் ஏறக்குறைய 15 ஆயிரம் பெண்கள், சட்டத்திற்குப் புறம்பே கருக்கலைப்பு செய்கின்றனர், இவர்களில் பத்துப் பேர் வீதம் ஒவ்வோர் ஆண்டும் இறக்கின்றனர் என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.