2017-02-17 16:06:00

இளம் துடிப்புள்ள ஓர் இதயம், அநீதியைச் சகித்துக்கொள்ளாது


பிப்.17,2017. “இளமைத் துடிப்புள்ள ஓர் இதயம், அநீதியைச் சகித்துக்கொள்ளாது, புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்குத் தலைவணங்காது மற்றும், உலகமயமாக்கப்பட்ட புறக்கணிப்பிற்கு, தன்னை உட்படுத்தாது” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியாயின.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் லாம்பதூசா தீவுக்குச் சென்று, அங்கு இருக்கின்ற புலம்பெயர்ந்த மக்களின் துன்பநிலை கண்ட பின்னர், உலகமயமாக்கப்பட்ட புறக்கணிப்பிற்கு எதிராக, அடிக்கடி குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை, தலைமைப்பணியை ஏற்றபின், 2013ம் ஆண்டில், அவர் சென்ற முதல் இடம், லாம்பதூசா தீவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உரோம் நகரில், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் முதல் பங்குத்தளம் தொடங்கப்பட்டதன் இருநூறாம் ஆண்டையொட்டி, இம்மாதம் 26ம் தேதி, அச்சபையின் அனைத்துப் புனிதர்கள் ஆலயத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26ம் தேதி ஞாயிறு மாலை நான்கு மணிக்குச் செல்லும் திருத்தந்தை, அச்சபையினரோடு ஒன்றிப்பு உணர்வை வெளிப்படுத்தும் நோக்கத்தில், அச்சபை ஆயர்களுடன் சேர்ந்து, திருமுழுக்கு உறுதிமொழிகளைப் புதுப்பிப்பார் என, அனைத்துப் புனிதர்கள் ஆலயத்தின் பங்குக்குரு ஜோனத்தான் போர்டுமான் அவர்கள் அறிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.