2017-02-17 16:24:00

இந்தியாவின் புதிய திருப்பீடத் தூதருக்கு டில்லியில் வரவேற்பு


பிப்.17,2017. இந்தியா மற்றும் நேபாளத்தின், புதிய திருப்பீடத் தூதரான, பேராயர் ஜாம்பத்திஸ்த்தா திகுவாத்ரோ (Giambattista Diquattro) அவர்கள், இவ்வியாழனன்று இந்தியா சென்றடைந்துள்ளார்.

பேராயர் ஜாம்பத்திஸ்த்தா திகுவாத்ரோ அவர்களை, இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் தலைமையிலான குழு, டில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் வரவேற்றது.

உரோம் நகரில் படிக்கும், மற்றும், பணியாற்றும், இந்திய அருள்பணியாளர்களுடன், அண்மையில், உரோம் புனித பிரிஜிட்டைன் அருள்சகோதரிகளின் இல்லச் சிற்றாலயத்தில், திருப்பலி நிறைவேற்றினார், பேராயர் திகுவாத்ரோ. இத்திருப்பலியில், ஏராளமான இந்திய அருள்சகோதரிகளும் கலந்துகொண்டு, பேராயரை வாழ்த்தினர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், திருப்பீடத் தூதராகப் பணியாற்றி வந்த பேராயர் திகுவாத்ரோ அவர்கள், 1954ம் ஆண்டு, மார்ச் 18ம் தேதி, இத்தாலியின் பொலோஞ்ஞோவில் பிறந்தவர்.

1981ம் ஆண்டில் அருள்பணியாளராகவும், 2005ம் ஆண்டில் பேராயராகவும் திருப்பொழிவு செய்யப்பட்டு, 2005ம் ஆண்டில், பானமா நாட்டிற்குத் திருப்பீடத் தூதராகவும், 2008ம் ஆண்டு, நவம்பர் 21ம் தேதி, பொலிவியா நாட்டிற்குத், திருப்பீடத் தூதராகவும் நியமிக்கப்பட்டார் பேராயர் திகுவாத்ரோ. இவர் தற்போது ஆசியாவில் முதல் முறையாக திருப்பீடத் தூதர் பணியைத் தொடங்குகிறார்.

இதுநாள்வரை இந்தியா மற்றும் நேபாளத்தின் திருப்பீடத் தூதராக பணியாற்றி வந்த பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ (Salvatore Pennacchio) அவர்கள், போலந்தின் திருப்பீடத் தூதராகச் செல்கிறார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.