2017-02-16 15:32:00

மாற்றுத்திறன் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுடன் திருத்தந்தை


பிப்.16,2017. விளையாட்டு, உடலுக்கும், ஆன்மாவுக்கும் நன்மை விளைவிக்கும்; நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த விளையாட்டு வீரர்களிடம் கூறினார்.

ஆஸ்திரியா நாட்டின், Graz, Schladming, Ramsau, Styria ஆகிய நகரங்களில், மார்ச் மாதம் 14ம் தேதி முதல், 25ம் தேதி முடிய, மாற்றுத் திறனாளிகளின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன.

இந்த விளையாட்டுக்களில் கலந்துகொள்ளச் செல்லும் வீரர்களின் பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுவாக, விளையாட்டு வீரர்கள் கொண்டுள்ள ஆர்வம், விடாமுயற்சி, பொறுமை ஆகிய பண்புகள் குறித்து அவர்களை பாராட்டினார்.

"நான் வெல்வேன். ஆனால், வெல்ல முடியாத போதும், நான் வீரத்தோடு முயற்சிகளை மேற்கொள்வேன்" என்று மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் வீரர்கள் எடுக்கும் உறுதி மொழியை, திருத்தந்தை, தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

வாழ்வில் நாம் அடையும் சின்னச் சின்ன வெற்றிகளிலும் நிறைவும், மகிழ்வும் அடையமுடியும் என்பதை, உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்வீரர்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும், சந்திக்கும் கலாச்சாரத்தையும், ஒருங்கிணைக்கும் கலாச்சாரத்தையும் வளர்க்க விளையாட்டுத் திடல்கள் சிறந்த வழிகள் என்றுரைத்தத் திருத்தந்தை, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு, மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் சிறந்த அடையாளங்கள் என்று வலியுறுத்திக் கூறினார்.

"உலகின் இதயத்துடிப்பு" என்ற வார்த்தைகளை தன் மையப்பொருளாகக் கொண்டு துவங்கவிருக்கும் மாற்றுத்திறனாளிகள் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்துகொள்வோர், துடிப்புடன், மகிழ்வுடன் இந்நாள்களை ஆஸ்திரியா நாட்டில் செலவிட, திருத்தந்தை, வீரர்களை வாழ்த்தி, ஆசீர்வதித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.