2017-02-16 15:39:00

படைப்பின் மீது மதிப்பு, முன்னேற்றத்தின் அடிப்படை


பிப்.16,2017. படைப்பின் மீது மதிப்பு, பொதுவான நலன், ஒவ்வொரு மனிதருக்கும் உரிய மாண்பு என்ற கொள்கைகளின் அடிப்படையில், நீடித்து நிலைக்கும் முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"நீடித்து நிலத்து நிற்கும் முன்னேற்ற இலக்கு 14: கடல்வாழ் உயிரினங்களைக் காப்பது" என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில், பிப்ரவரி 15, 16 ஆகிய நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பாக, ஐ.நா. கருத்தரங்குகளில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு உரையாற்றினார்.

"இறைவா உமக்கே புகழ்: நம் பொதுவான இல்லத்தைப் பேணுதல்" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள திருமடலை, சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், இயற்கை சீரழிவு என்ற பிரச்சனையைத் தீர்க்க, பரந்துபட்ட, பன்முகக் கண்ணோட்டம் தேவை என்று திருத்தந்தை தன் திருமடலில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

மனித சமுதாயத்தின் சிறு குழுக்களில் துவங்கும் கலந்துரையாடல், உலக அவைகள் வரை உண்மையான கலந்துரையாடல்களாக இருப்பதே, பூமிக்கோளத்தைக் காப்பதற்கு தகுந்த வழி என்று பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.