2017-02-15 15:15:00

பாசமுள்ள பார்வையில்… கனவை நனவாக்கிய பிள்ளைப் பாசம்


இது, 2012ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒரு சம்பவம். இது, தாய்-சேய் பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

சீனத் தலைநகர் பீஜிங்கைச் சேர்ந்தவர் 26 வயது பான் மெங்க். இவரது தாய் கோவ் மின்ஜூன் என்பவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனார். பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் காலத்தை கழித்து வந்த இவருக்கு, யுனான் மாநிலத்தில், இயற்கையின் சொர்க்கமாக விளங்கும், ஜிஸ்ஹூவாங்பனா பகுதியை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நெடுநாளாக ஓர் ஆசை இருந்தது. புத்த மதம் இங்கிருந்துதான் சீனா முழுவதும் பரவியதாக நம்பிக்கை உள்ளது. இந்த அற்புதமான இடத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது கோவ் மின்ஜூனின் ஆசை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் அந்த கனவு நிறைவேறாது என்று நினைத்தார். ஆனால், 26 வயது மகன் பான் மெங்க், தாயின் கனவை நிறைவேற்ற முடிவெடுத்தார். சக்கர நாற்காலியில் இருக்கும் தாயை, பேருந்து, இரயில், அல்லது, விமானத்தில் அழைத்துச் செல்வது பெரும் சிக்கலாக இருந்தது. கடைசியில் துணிந்து சக்கர நாற்காலியிலேயே தாயை அழைத்துக்கொண்டு கிளம்பினார். ஒருநாள், இரண்டு நாள்கள் அல்ல.. 100 நாள்களில், 3,500 கி.மீ. தூரம் கடந்து, அம்மாவும் மகனும் அந்த அற்புத இடத்துக்கு வந்தடைந்தனர். ஜிஸ்ஹூவாங்பனா பகுதியின் இயற்கை எழிலை பார்த்ததும், அம்மா கோவ் மின்ஜூனின் கண்ணில் ஆனந்த கண்ணீர். மகன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து நெகிழ்ந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கணவர், விவாகரத்து பெற்று சென்ற பின், ஒரே மகனுடன் வாழ்ந்துவரும் கோவ், தன் கனவை நிறைவேற்ற தன் வேலையையும் விட்டுக் கொடுத்த மகனை நெகிழ்ச்சியுடன் பாராட்டுகிறார். தாயை மகிழ்விக்க எந்தத் தியாகத்தையும் ஆற்றலாம் என்பது அந்த சீன இளைஞர் கற்றுத்தரும் பாடம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.