2017-02-15 15:39:00

தூக்கியெறியும் கலாச்சாரம், இயேசுவின் கலாச்சாரம் அல்ல


பிப்.15,2017. "தூக்கியெறியும் கலாச்சாரம் இயேசுவின் கலாச்சாரம் அல்ல. நாடு, சமுதாயம், மதம் என்ற அனைத்து எல்லைகளையும் தாண்டி, அடுத்தவர் என் உடன்பிறப்பு" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியிடப்பட்டன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீட அதிகாரிகள் அனைவரோடும், மார்ச் மாதம் 5ம் தேதி முதல், 10ம் தேதி முடிய மேற்கொள்ளவிருக்கும் ஆண்டு தியானத்தை, பிரான்சிஸ்கன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணி ஜூலியோ மிக்கேலினி (Giulio Michelini) அவர்கள் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசிசி நகரில் உள்ள இறையியல் கல்லூரியில் பேராசியராகப் பணியாற்றிவரும், அருள்பணி மிக்கேலினி அவர்கள், மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றை மையப்படுத்தி, தன் தியான உரைகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரோம் நகருக்கருகே, அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள, விண்ணகப் போதகர் இல்லத்தில், மார்ச் 5ம் தேதி, ஞாயிறு மாலை 6 மணியளவில் திருநற்கருணை ஆராதனையுடன் துவங்கும் இந்த தியான நாட்கள், மார்ச் 10 வெள்ளியன்று நிறைவுக்கு வரும்.

கடந்த ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும், திருப்பீட உயர்மட்ட குழுமம் மேற்கொள்ளும் ஆண்டு தியானத்தின்போது, ஏனைய சந்திப்புக்களும், திருத்தந்தையின் புதன் பொது மறையுரை சந்திப்பும் நிகழாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.