2017-02-14 15:54:00

பயங்கரவாதத்தாக்குதலிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்ற அழைப்பு


பிப்.14,2017. துண்டு துண்டாக இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், இக்கட்டான உள்கட்டமைப்புகளுக்கு எதிரான, பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், பன்னாட்டு சமுதாயம் ஒன்றுசேர்ந்து செயல்பட வேணடும் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், இத்திங்களன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிரான, நெருக்கடி நிறைந்த உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது குறித்து, ஐ.நா. பாதுகாப்பு அவையில் நடந்த, பொது கலந்துரையாடலில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

நகரங்களிலும், கிராமங்களிலும் முடிவில்லாமல், தொடர்ந்து இடம்பெற்றுவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள், அப்பாவிகளின் உள்கட்டமைப்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்றும், அப்பாவி மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு, பன்னாட்டு சமுதாயம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார், பேராயர் அவுசா.

சட்டத்திற்குப் புறம்பே நடைபெறும் ஆயுத வர்த்தகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், திட்டமிட்டக் குற்றக்கும்பல்களின் பங்கு ஒழிக்கப்படவும், பன்னாட்டு சமுதாயத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், ஐ.நா.வில் கூறினார்,பேராயர் அவுசா.

பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி உதவிகள் தடை செய்யப்பட வேண்டும் எனவும், எல்லைகள் இன்றி எல்லா இடங்களிலும் நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு, இணையதள தொழில்நுட்ப நடவடிக்கைகள் அவசியம் எனவும், பேராயர் அவுசா அவர்கள், கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.