2017-02-14 15:26:00

துணிவு, செபம், தாழ்மையுடன் நற்செய்தியை அறிவியுங்கள்


பிப்.14,2017. துணிவு, செபம், தாழ்மை ஆகிய மூன்று பண்புகளுமே, உலகில், திருஅவையின் மறைபரப்புப் பண்பு வளர்வதற்கு உதவிய மாபெரும் நற்செய்தி அறிவிப்பாளர்களைத் தனித்துக் காட்டின என, இச்செவ்வாய் மறையுரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 14, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, ஐரோப்பாவின் பாதுகாவலர்களாகிய, புனிதர்கள் சிரில், மெத்தோடியுஸ் விழாத் திருப்பலியை, சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனிதர்களின்  எடுத்துக்காட்டான வாழ்விலிருந்து மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

புனிதர்கள் சிரில், மெத்தோடியுஸ் போன்று, இறைமக்களை உண்மையான நற்செய்தி அறிவிப்பாளர்களாக உருவாக்குவதற்கு, இறைவார்த்தையை விதைக்கும் மறைப்பணியாளர்கள் தேவை என்றும், இறைவார்த்தையைப் போதிப்பதற்கு, துணிச்சல் அவசியம் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தில் இடம்பெற்றுள்ள பவுல், பர்னபாஸ் ஆகியோரைக் குறித்தும், லூக்கா நற்செய்தியில், இயேசு, 72 பேரை, இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்பியது குறித்தும், மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, செபம் இல்லாமல், இறைவார்த்தையை அறிவிப்பது ஒரு கருத்தரங்காக மாறிவிடும் என்று கூறினார்.

உண்மையான போதகர் தாழ்ச்சியுடையவராக இருக்க வேண்டும், இல்லாவிடில், அனைத்துச் செயல்களும், மோசமான நிலையில் முடியும் என எச்சரித்த திருத்தந்தை, புனிதர்கள் சிரில், மெத்தோடியுஸ் போன்று, துணிவு, செபம், தாழ்மை ஆகிய பண்புகளுடன், நற்செய்தி அறிவிக்கச் செல்வதற்கு, ஆண்டவரின் அருளை மன்றாடுவோம் எனவும், மறையுரையில் கூறினார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், புனிதர்கள் சிரில், மெத்தோடியுசை, ஐரோப்பாவின் பாதுகாவலர்கள் என அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.