2017-02-13 15:43:00

வாரம் ஓர் அலசல் – நல்ல தலைவர்களிடம் நாடு கையளிக்கப்பட..


பிப்.13,2017. தற்போதைய தமிழக அரசியல் சூழல், தேசிய, ஏன், பன்னாட்டுச் செய்தியாகவே மாறியுள்ளது. வாட்சப், நெட்டிசன் கலக்கல்களும் ஒரு நிமிடத்திற்கு ஒரு செய்தியாக வருகிறது. முக்கிய கதா நாயகர்கள், இன்னும், தெரிந்த மற்றும், பல தெரியாத சைடு நாயகர்கள் என, வழக்கமான கதைபோலத்தான், இந்நாள்களில் தமிழக அரசியல் இருக்கின்றது என, தமிழக அரசியலை, திரைக் கதையாகவே, வாட்சப் கலக்குகிறது. அதேநேரம், பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஒரு வாட்சப் பகிர்வு இருந்தது. பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது,  சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று, கம்யூனிச கட்சியின் ஜீவா போராடினார். அப்போது,  தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில்தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச் செல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார் காமராஜர். ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு, ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்" என்று கேட்டார்" ஜீவா. "என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?" என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர். உடனே ஜீவா, இங்கே இருக்கிற எல்லாரையும் போலத்தான் நானும் இருக்கேன், என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார். காமராஜரை, உட்கார வைக்க, ஒரு நாற்காலிகூட இல்லாததால், இருவரும், நின்றுகொண்டே பேசினார்கள். "நீ அடிக்கல் நாட்டிய, பள்ளிக்கூடத்தைத் திறக்கனும். அதான் உன்னையும் கூட்டிட்டுப்போக வந்தேன்" என்றார் காமராஜர். அதற்கு ஜீவா, "காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்" என்று மறுக்க, "அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்,  காமராஜர். "அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரைமணி நேரத்துல வந்துடுறேன்" என்று அனுப்பி வைத்தார் ஜீவா. ஆனால், விழாவுக்கு, அரைமணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா. "என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...?" என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார். உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே" என்றார். உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

பள்ளிக்கூடத் திறப்பு விழா நல்லபடியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை,  காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்குத் தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களை அழைத்துப் பேசினார் காமராஜர். "ஜீவாவுக்கு வீடு கொடுத்தால் போக மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனால், அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்"....? என்றார். கூட்டத்தில் இருந்த ஒருவர், "ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தால், அந்தக் குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார். உடனே காமராஜர், "மிகவும் நல்ல யோசனை. ஆனால், நான் கொடுத்தால், அவன் மனைவியை வேலைசெய்ய விடமாட்டான். அதனால் நீங்களாக, ஜீவா மனைவியிடம் பேசி, "வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் ஒரு வேலை காலியாக இருக்கிறது எனச் சொல்லி, மனுபோடச் சொல்லுங்கள். உடனே,  நான் வேலை போட்டுத் தருகிறேன். ஆனால், இந்த விடயம் வேறு யாருக்கும் தெரியக் கூடாது, ஜீவா முரடன், உடனே வேலையைவிடச் சொல்லுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே, ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது. ஜீவா, நோயினால், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனக்கு முடிவு வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... "காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"... என்பதுதான். இனி எங்கே காணமுடியும்..? இவர்கள் போன்ற தலைவர்களை. அடித்தட்டு மக்களோடு மக்களாக, வறுமையை உணர்ந்த, பகிர்ந்த தலைவர்கள், கர்மவீரர் காமராஜர், ஜீவா, கக்கன் போன்ற தலைவர்கள். காமராஜர் தன் தாய் சிவகாமி அம்மாளுக்கு, மாதம் வெறும் 120 ரூபாய் மட்டுமே பணம் அனுப்பினார். மகன் அனுப்பும் பணம் போதுமானதாக இல்லை. எனவே ஒருசமயம், தாய், தயங்கித் தயங்கி, தன் சொந்த மகனுக்கே, தூதுவிட்டார். மகனே, நீ முதல் அமைச்சரானதும், என்னைப் பார்க்க, ஒவ்வொரு நாளும், யார் யாரோ வருகின்றனர். வீடு தேடி வருபவர்களுக்கு, சோடாவோ, கலரோ வழங்காமல் அனுப்ப முடியவில்லை. அதனால் செலவு கொஞ்சம் கூடுகிறது. எனவே இனிமேல் மாதம் 150 ரூபாய் அனுப்பினால் நல்லது என, அவரின் தாய் எழுதியிருந்தார். அதற்கு காமராஜர், அம்மா, உங்களைத் தேடி வருபவர்களுக்கு, சக்திக்கு மீறிச் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சோடா, கலர் தருவதை இனிமேல் நிறுத்துங்கள். நான் அனுப்பும் 120 ரூபாயில் வாழ்க்கையை சிக்கனமாக நடத்துங்கள் என்று பதில் சொல்லி அனுப்பினார். முதலமைச்சர் பதவியைக்கூட, தலைவர்களின் நிர்பந்தத்தினால் ஏற்றுக்கொண்டார் பெருந்தலைவர் காமராஜர். அவர் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வதற்குமுன் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கட்சிக்காரர்களோ, நண்பர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ எனது ஆட்சியிலே தலையிடக் கூடாது. அனுமதி, சலுகை, வேலைவாய்ப்பு, ஒப்பந்தவேலை என்று எதற்கும் என்னிடம் வரக்கூடாது. இந்த நிபந்தனைக்கெல்லாம் நீங்கள் உடன்பட்டால் நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன். நான் அரசுக்கும் மக்களுக்குமே உழைப்பேன்”என்றார் காமராஜர். ஒருமுறை காமராஜரைப் பார்த்து, நண்பர் ஒருவர், ”நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். ”தாயாருக்கு அனுப்பி வைக்கிறேன். அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லி போகிறேன். அதற்கெல்லாம் சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சர் என்ற முறையில் போனால் அரசு செலவு. கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருவேன்”என்று கூறினாராம். கட்சியோடு அரசையும், அரசோடு கட்சியையும் கலக்காதவர் காமராஜர்.

காமராஜரின் தங்கை மகன் ஒரு வேலை வாய்ப்புக்காகத் தனது தாய் மாமனான முதலமைச்சர் காமராஜரிடம் வந்தார். தான் ஒரு வேலைக்கு மனுப்போட்டிருப்பதாகவும், பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அதற்குக் காமராஜர், ”நான் பரிந்துரை செய்யமாட்டேன். நீ அந்த வேலைக்கு தகுதியானவனாக இருந்தால், அவர்கள் தானாகவே உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். தப்பித் தவறி நீ என் பெயரை உன் வேலைக்காகச் சொல்லக்கூடாது. போய் வா” என்று அனுப்பிவிட்டார். ஒருமுறை, சிவகாமி அம்மையார் ஒரு நூறு ரூபாய் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அப்போது காமராஜரும், ஆர்.வி. சாமிநாதனும், சென்னை, தி.நகர், திருமலைப்பிள்ளை வீட்டில் நன்கொடையாக வந்த பணத்தை எண்ணிக்கொண்டு இருந்தார்கள். காமராஜரின் உதவியாளர் வைரவன் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறினார். உடனே ஆர்.வி. சுவாமி நாதன், நூறு ரூபாய்தானே என்று, தான் எண்ணிக்கொண்டிருந்த பணத்திலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். காமராஜர் அந்த ரூபாய் நோட்டுகளை அவரிடமிருந்து பிடுங்கி நன்கொடைப் பணத்தோடு சேர்த்துவிட்டார். காமராஜரின் நேர்மைக்கும், நியாயத்திற்கும், எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

காமராஜர், பெற்ற தாயைவிடக் இந்தியத் தாயையே தன் தாயாகக் கருதினார். தன் உற்றார் உறவினர்களைவிட இந்திய நாட்டு மக்களையே தனது உற்றார், உறவினர்களாக நினைத்தார். இவரின் அமைச்சரவையில் இருந்தவர்களும் எளிமையானவர்கள். உள்துறை அமைச்சர் கக்கன் கடைசி காலத்தில், மருத்துவம் பார்க்கப் பணமில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகைய தலைவர்களைக் கொண்டிருந்த தமிழகம், தற்போதும் நல்ல தலைவர்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே நம் எல்லாருடைய செபம். தமிழகத்திற்கு இறைவன்தான் அற்புதம் நிகழ்த்த வேண்டும்.

சாலாவாட் (Salavat) என்ற கிறிஸ்தவர், உஸ்பெகிஸ்தான் நாட்டில், கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று, தனது வாழ்வை, யுடியூப்பில் இவ்வாறு பகிரந்துகொண்டுள்ளார். கிறிஸ்துவை அறிவித்ததற்காக எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டேன். ஆனால் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படாததால், நான்கு மாதங்களிலேயே விடுதலை செய்யப்பட்டேன். நான் வீட்டிற்கு வந்தபோது எனது மனைவியும், இரு மகள்களும் பட்டினி பசியால் வாடியதைக் கண்டேன். அதுவும் கடைசி ஒருவாரத்தில், தண்ணீரைத் தவிர, சாப்பிட எதுவுமே அவர்களுக்கு இல்லை.  காவல்துறை என் வீட்டைக் கண்காணித்து வந்ததால் யாரும் உதவவில்லை. எனது மனைவி, என்னிடம் இப்போது நாம் என்ன செய்யலாம் என்று கேட்டார். செபிப்போம் என்றேன். அடுத்த நாள் எனது தோட்டத்தில் வேலை செய்தேன். எதுவுமே வளரவில்லை. அப்போது எனது ஐந்து வயது மகள் என்னிடம், அப்பா, நாம் தோட்டத்தில் வேலை செய்தால் கடவுள் நமக்கு ரொட்டி தருவாரா என்று கேட்டாள். கொஞ்சம் பொறுத்திரு, கடவுளில் நம்பிக்கை வை மகளே என்றேன். பின் தொடர்ந்து வேலை செய்தேன். சிலமணி நேரம் கழித்து இருவர் வந்து, எனது பெயரைக் கேட்டனர். நான் சாலாவாட் எனச் சொன்னேன். பின், வந்தவர்கள் பெயரைக் கேட்டேன். அது முக்கியமல்ல என்று சொல்லி, ஒருவர் ஒரு வெள்ளைக் கவரை, என் கையில் வைத்துவிட்டு இருவரும் சென்று விட்டனர். அதில் நிறைய பணம் இருந்தது. அவர்கள் யார், எங்கிருந்து வந்தனர் என்பது எனக்குத் தெரியாது. இதை நான் பகிர்ந்துகொண்டுள்ளதால் இப்பொழுதும் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறேன். இவ்வாறு கூறியுள்ள சாலாவாட் அவர்கள், அற்புதங்கள் ஆற்றுபவர் கடவுள் என்று கூறியுள்ளார். ஆம். அன்பு நேயர்களே, நாமும் நம்பிக்கையோடு நம் விண்ணப்பங்களை கடவுளிடம் எழுப்புவோம். நம் நாடுகளில் நல்ல தலைவர்கள் நல்லாட்சி புரிய வேண்டுமெனச் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.