2017-02-13 15:33:00

பாசமுள்ள பார்வையில்.. தாயுமான ஆசிரியர்


ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான திருமதி தாம்சன் (Thompson), தனது வகுப்பில் நுழைந்தவுடன், “நான் உங்கள் எல்லாரையும் அன்புகூர்கிறேன்” என்று மாணவர்களை வாழ்த்துவது வழக்கம். அப்புதிய கல்வியாண்டில் தனது வகுப்புக்கு முதல் நாள் சென்ற அவர், வழக்கம்போல் வாழ்த்தினார். ஆனால் அவரின் வாழ்த்தில் உண்மையில்லை என்பது அவருக்குத் தெரியும். ஏனென்றால் அந்த வகுப்பில் முதல் பெஞ்சில், டெடி ஸ்டோடார்ட் (Teddy Stoddard) என்ற மாணவன், அழுக்கான உடையணிந்து, பார்ப்பதற்கே அசிங்கமாக அமர்ந்திருந்தான். அன்றிலிருந்தே, டெடி மீது ஒருவித எதிர்மறை உணர்வை வளர்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் தாம்சன், வகுப்பில், எதிர்மறையாக எதையாவது சொல்ல நேரிட்டால், டெடியையே எடுத்துக்காட்டாகச் சொல்வார். காலாண்டு தேர்வு முடிந்து, மாணவர்களின் முன்னேற்ற அறிக்கையை தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பித்தார் தாம்சன். அவ்வறிக்கையில், டெடி பற்றி வாசித்த தலைமை ஆசிரியர், தனது பணியாளரை அழைத்து, டெடியின் முந்திய வகுப்புகள் அறிக்கைகளை ஆசிரியர் தாம்சனிடம் கொடுக்கச் சொன்னார். “டெடி மிகத் திறமையான, ஒழுக்கமான மாணவன், மாணவர்களுக்கு இவனை மிகவும் பிடிக்கும்” என்று, முதல் வகுப்பு ஆசிரியரும், “டெடி மிகவும் திறமையானவன், நல்ல சிறுவன், ஆனால் இவனின் அம்மா கடும் புற்றுநோயால் துன்புறுவதால், இவன் பாதிக்கப்பட்டுள்ளான்” என, இரண்டாம் வகுப்பு ஆசிரியரும், “டெடியின் அம்மா இறந்து விட்டார், அவனின் அப்பா அவனுக்குப் போதிய ஊக்கம் தரவில்லை, அவனின் குடும்ப நிலைமை அவனை விரைவில் பாதிக்கும்” என, மூன்றாம் வகுப்பு ஆசிரியரும், “டெடி சோர்வாக உள்ளான், நண்பர்கள் இல்லை, ஒதுங்கி வாழ்கிறான், சிலநேரங்களில் வகுப்பில் தூங்கி விடுவான்” என, நான்காம் வகுப்பு ஆசிரியரும் எழுதி இருந்தனர். அதை வாசித்த தாம்சனின் கண்களில் நீர். அதன்பின் டெடியிடம் அவரின் அணுகுமுறை தலைகீழாக மாறியது. தாம்ப்சனின் செல்ல மாணவரானார் டெடி. அந்த ஆண்டு கிறிஸ்மசுக்கு, மாணவர்கள், ஆசிரியர் தாம்சனுக்கு பரிசுகள் வழங்கினர். அதில் ஒரு பரிசு, பழைய தினத்தாளில் பொதியப்பட்டிருந்தது. இது டெடியின் பரிசாகத்தான் இருக்கும் என்று நினைத்து அதைப் பிரித்தார் ஆசிரியர். அதில் பயன்படுத்தப்பட்ட வாசனைத் திரவிய பாட்டில் ஒன்றும், பழைய வளையல் ஒன்றும் இருந்தன. வளையலில் சில கற்கள் விழுந்திருந்தன. இந்தப் பரிசைப் பார்த்து மாணவர்கள் சிரித்தனர். ஆனால், தாம்சனோ, என்ன அழகான வளையல் என்று சொல்லி, அதை உடனே தனது கையில் போட்டு, வாசனைத் திரவியத்தையும் உடலில் தடவினார். வகுப்பு முடிந்து மாணவர்கள் சென்றவுடன், டெடி, தாம்சனிடம், இவை என் அம்மா பயன்படுத்தியவை. என் அம்மாவை சவப்பெட்டியில் வைக்குமுன், இந்த வளையலைக் கழற்றினார்கள். நீங்கள் என் அம்மா போன்று இருக்கிறீர்கள் என்று சொன்னான். ஆண்டுகள் உருண்டோடின. “உங்களைப் போன்ற சிறப்பான ஆசிரியரை இதுவரை நான் சந்தித்ததே இல்லையென”, டெடி தனது கல்வியாண்டை முடிக்கும்போதெல்லாம், தனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியருக்கு கடிதம் எழுதி வந்தார். ஆசிரியர் தாம்சன் பணி ஓய்வில் இருந்த காலத்தில், ஒருநாள், Dr.Theodore F. Stoddard, M.D. எனக் கையெழுத்திட்டு, ஒரு கடிதம் வந்தது. எனக்குத் திருமணம், கட்டாயம் நீங்கள் வரவேண்டும் என்று எழுதி, அதில் விமானப் பயணச்சீட்டும் இருந்தது. தாம்சனும், டெடி கொடுத்த பழைய வளையலை அணிந்து கொண்டு, திருமணம் நடந்த நகரின் ஆலயம் சென்று கடைசி இருக்கையில் அமர்ந்தார். ஆனால், முதல் இருக்கையில், “அம்மா” என்று எழுதப்பட்டிருந்த நாற்காலியில், அவரை அழைத்துச் சென்று அமர வைத்தனர். திருமணம் முடிந்து டெடி தனது மனைவியிடம், இவர் என் அன்னையைப் போன்றவர், இவரில்லாமல் இன்று நான் இந்த நிலைமையை எட்டியிருக்க முடியாது என, தன் ஆசிரியரை அறிமுகப்படுத்தினார். அப்போது ஆசிரியர், தாம்சன், ஓர் ஆசிரியர், ஒவ்வொரு மாணவருக்கும், முதலில் தாயாக, அன்னையாக இருக்க வேண்டுமென்பதை, எனக்கு உணர்த்தியவர் டெடிதான் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.