2017-02-13 16:33:00

இஸ்ராயேலுக்குள் பிறந்த வெளிநாட்டு சிறாரை வெளியேற்ற எதிர்ப்பு


பிப்.,13,2017. பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து இஸ்ராயேலுக்குள் பணிபுரிய வந்த பெற்றோருக்கு இஸ்ராயேலில் பிறந்த 14 சிறார்களை, இஸ்ராயேல் நாட்டை விட்டு வெளியேற்ற அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது எருசலேம் தலத் திருஅவை.

பிலிப்பீன்ஸ் பெற்றோருக்கு இஸ்ராயேலில் பிறந்து 11 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்துள்ள இச்சிறார்களுக்கு தங்கும் அனுமதி இல்லை என இஸ்ராயேல் அரசு கூறியுள்ளதை எதிர்த்து, இஸ்ராயேல் உள்துறை அமைச்சர்  Aryeh Deriக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் யெருசலேமின் இயேசு சபை அருள்பணி David Neuhaus.

யூத மரபில் பிறந்து, இயேசு சபை அருள்பணியாளராகி, தற்போது எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை அலுவலகத்தில், குடியேற்றதாரர் மேய்ப்புப்பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் அருள்பணி டேவிட் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், எபிரேய மொழியைப் பேசி, இஸ்ராயேலை தங்கள் சொந்த நாடாகக் கருதி, அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் இச்சிறார்களை வெளியேற்ற முயல்வது, எவ்வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ராயேல் நாட்டின் முதியோருக்கும், நோயாளிகளுக்கும் பணியாற்ற இஸ்ராயேலுக்குள் வந்த குடியேற்றதாரர்களுக்கு பிறந்த குழந்தைகளை நாட்டை விட்டு வெளியேற்ற முயல்வது, இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மைக்கு எதிராகச் செல்லும் நிலையாகும் என மேலும் கூறியுள்ளார் இயேசு சபை அருள்பணி டேவிட்.

ஆதாரம் :  ICN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.