2017-02-11 15:44:00

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகள் உலக நாள் பிப்ரவரி 11


பிப்.11,2017. பெண் பொறியியலாளர்கள் மற்றும், பெண் கணனி அமைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று, ஐ.நா.வின் புதிய அறிக்கை அழைப்பு விடுத்திருப்பது, உலகில், குறிப்பாக, வளர்ந்த பொருளாதார நாடுகளில், பொறியியலிலும், கணனி அறிவியலிலும், பெண்கள் பட்டயம் பெறுவது குறைவாக உள்ளது எனத் தெரிவதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 11, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகள் உலக நாளை முன்னிட்டு, “2030ம் ஆண்டை நோக்கி” என்ற தலைப்பில், ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்திற்கு அறிவியல் அவசியம் என்றும், அறிவியலுக்குப் பெண்கள் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, கொரியா, அமெரிக்க ஐக்கிய நாடு, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் போன்ற பகுதிகளில், 2000 மற்றும், 2012ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கணனி அறிவியலில் பட்டம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று, அவ்வறிக்கை கூறுகிறது.

உலகில் வளர்ந்து வரும் கணனித் துறையில், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அத்துறையில், பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டுமெனவும் யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.