2017-02-09 16:15:00

நவீன அடிமைத்தனங்களுக்கு எதிராகப் போராட அழைப்பு


பிப்.09,2017. நவீன கால அடிமைத்தனங்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கவேண்டும் என, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தந்தையும், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைத் தலைவரும் இணைந்து கையெழுத்திட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நவீன அடிமைத்தனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் இந்த அறிக்கை, அடிமைத்தனங்களால் உருவாக்கப்பட்ட துன்பங்களுக்கு கடந்த காலங்களில் செவிமடுக்காமல் பாராமுகமாய் இருந்ததற்கு மனம் வருந்துவதாகவும் அறிவித்துள்ளது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களும், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை தலைவர் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும் இணைந்து கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கையானது, Istanbul நகரில் பல்வேறு மதத்தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்கள், இவ்வாரம், திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் கலந்துகொண்ட, நவீன அடிமைத்தனம் குறித்த கருத்தரங்கின் கனியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிமைத்தனங்களுக்கு காரணமானோர் தண்டிக்கப்படுதல், பாதிக்கப்படுவோர் காப்பாற்றப்படுதல், மக்களிடையே நம்பிக்கையை உருவாக்குதல் போன்றவற்றில், அரசுத்தலைவர்கள் தங்களை ஈடுபடுத்த வேண்டும் என, இவ்விரு தலைவர்களும் தங்கள் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.