2017-02-09 16:34:00

சந்திப்பு கலாச்சாரத்தில் வாழ்வு வளர்கின்றது - திருத்தந்தை


பிப்.09,2017. இரண்டாம் வத்திக்கான் சங்கம் துவங்கி, கத்தோலிக்கருக்கும், யூதர்களுக்கும் இடையே நல்லுறவு வளர்ந்து வருவது மனதுக்கு நிறைவைத் தருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த யூதப் பிரதிநிதிகளிடம் கூறினார்.

யூதர்களுக்கு எதிராக உலகெங்கும் பரவிவந்த வெறுப்பைக் களைவதற்கு 1913ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Anti-Defamation League, அதாவது, அவதூறு எதிர்ப்பு இயக்கம் என்ற பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

சந்திப்பு, ஒப்புரவு ஆகியவற்றை வளர்க்கும் கலாச்சாரத்தில், வாழ்வும், நம்பிக்கையும் வளர்கின்றன என்று கூறியத் திருத்தந்தை, இதற்கு எதிர் துருவமாக அமைந்துள்ள வெறுப்பு கலாச்சாரம் சாவையும் விரக்தியையும் உலகெங்கும் பரப்பி வருவது, வேதனை தருகிறது என்று எடுத்துரைத்தார்.

கடந்த ஆண்டு, போலந்து நாட்டில் Auschwitz-Birkenau வதைமுகாமுக்கு தான் சென்றதைப் பற்றி, யூத பிரதிநிதிகளிடம் நினைவுகூர்ந்தத் திருத்தந்தை, தங்களைத் துன்புறுத்துபவர்கள் மீது இறைவன் கருணை காட்டவேண்டும் என்று அந்த முகாம் சுவர் ஒன்றில் தான் வாசித்த செபத்தை சிறப்பாகக் குறிப்பிட்டார்.

யூத வெறுப்பு என்ற குற்றத்திற்கு தான் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாகக் கூறியத் திருத்தந்தை, யூத வெறுப்பு என்ற தீமையை உலகிலிருந்து அகற்றுவதற்கு, அவதூறு எதிர்ப்பு இயக்கம் எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டினார்.

யூதர்களுக்கும், கத்தோலிக்கருக்கும் இடையே இதுவரை நிகழ்ந்துள்ள உரையாடல் மற்றும் ஒப்புரவு முயற்சிகள் இனி வரும் காலங்களிலும் வளரவேண்டும் என்ற வாழ்த்துடன், திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.