2017-02-09 16:20:00

'La Civilta Cattolica' பணியாளருக்கு திருத்தந்தை பாராட்டு


பிப்.09,2017. அச்சுப்பணியில் 167 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 'La Civilta Cattolica' இத்தாலிய இதழில் பணியாற்றும் இயேசு சபையினரையும், ஏனைய பொது நிலையினரையும் மனதார பாராட்டுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

1850ம் ஆண்டு, இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரில் துவங்கப்பட்டு, இன்று உரோம் நகரில் இயங்கிவரும் 'La Civilta Cattolica' இதழ், இம்மாதம் 11ம் தேதி, தன் 4000மாம் பதிப்பை வெளியிடுவதையொட்டி, இவ்விதழில் பணியாற்றும் 60க்கும் மேற்பட்டோரை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதுவரை இத்தாலிய மொழியில் மட்டுமே வெளியாகிவந்த இவ்விதழ், விரைவில் இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் கொரிய மொழிகளில் வெளிவரவிருப்பதற்கு தன் தனிப்பட்ட பாராட்டுக்களை திருத்தந்தை தெரிவித்தார்.

உறுதியான இடத்தில் நங்கூரம் பாய்ச்சி, பாதுகாப்பாக இருப்பதற்குப் பதில், பரந்து விரிந்த கடலில், புயல்களைச் சந்தித்தாலும், தொடர்ந்து பயணம் செய்யவேண்டியது, இவ்விதழை நடத்தும் இயேசு சபையினருக்கு தான் விடுக்கும் அழைப்பு என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

திருத்தந்தையருக்கென்று தனிப்பட்ட முறையில் பணியாற்றும் 'La Civilta Cattolica' இதழ், எவ்வாறு பல்வேறு காலக்கட்டத்தில் எதிர் காற்றினைச் சந்தித்தாலும், தொடர்ந்து பேதுருவின் படகினில் பயணம் செய்தது என்பதை, திருத்தந்தை தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

'La Civilta Cattolica' இதழ், இதுவரை உருவாக்கியுள்ள 4000 இதழ்கள், வெறும் காகிதங்கள் மட்டுமல்ல, அவற்றில் பதிந்திருப்பது ஆழ்ந்த சிந்தனைகளும், உணர்வுகளும் அடங்கிய அயராத பணி, மற்றும், வாழ்க்கை என்று கூறியத் திருத்தந்தை, இந்த இதழில் பணியாற்றுவோர் அனைவரும் தங்களை 'அறிஞர்கள்' என்று அடையாளப்படுத்துவதைக் காட்டிலும், 'பணியாளர்கள்' என்று அடையாளப்படுத்துவது, தனக்கு மிகவும் பிடித்த ஓர் எண்ணம் என்று சிறப்பாகக் குறிப்பிட்டார்.

2013ம் ஆண்டு தான் பணியேற்ற காலத்திலிருந்து, தன் எண்ணங்களை மக்களுக்குக் கொணர்வதில் 'La Civilta Cattolica' இதழ், ஆற்றிவந்துள்ள அரிய பணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி கூறினார்.

1000, 2000, 3000 என்ற வரலாற்று மைல் கற்களைக் கடந்து வந்துள்ள 'La Civilta Cattolica' இதழ், அந்தக் காலக்கட்டங்களில் பணியாற்றிய, திருத்தந்தையர் 13ம் லியோ, 9ம் பயஸ் மற்றும் அருளாளர் 6ம் பவுல் ஆகியோருடன் இந்த சாதனைகளைக் கொண்டாடியதையும் தன் உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

167 ஆண்டுகள் வரலாற்றை நிறைவு செய்துள்ள 'La Civilta Cattolica' இதழ், தற்போது, இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் கொரிய மொழிகளில் தன் பணியை விரிவு படுத்துவது குறித்து தன் சிறப்பான வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை, தொடர்ந்து இவ்விதழ் இன்னும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள துணிவு பெறவேண்டும் என்று கூறினார்.

கோவில்களுக்குள் அடைபடாமல், சமுதாயத்தின் விளிம்பைத் தேடிச்செல்லும் திருஅவையுடன், 'La Civilta Cattolica' இதழும் பயணம் செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை தன் வாழ்த்துரையில் வெளியிட்டார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.