2017-02-08 17:16:00

மியான்மார், வன்முறையில் சிக்கிக்கொள்ளக் கூடாது- கர்தினால் போ


பிப்.08,2017. மியான்மார் நாட்டில் அண்மைக் காலத்தில் உருவான மாற்றங்கள் நம்பிக்கை தந்த வேளையில், அந்த நம்பிக்கையைக் குலைக்கும்வண்ணம் வெறுப்பு வர்த்தகர்கள் நாட்டில் கலவரங்களை உருவாக்கி வருகின்றனர் என்று, மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

கர்தினால் போ அவர்கள் அண்மையில் எழுதியுள்ள ஒரு மேய்ப்புப்பணி மடலில், மதம், இனம் என்ற அடிப்படையில் வெறுப்பை வளர்ப்பவர்கள் செய்துவரும் தீமைகள் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ரோஹிங்கியா இஸ்லாமியருக்கு இழைக்கப்படும் துன்பங்கள், கச்சின் பகுதியில் இரு கிறிஸ்தவர்களின் கைது, மற்றும், தலைவர் ஆங் சான் சூச்சி அவர்களுக்கு ஆலோசனை வழங்கிவந்த இஸ்லாமிய வழக்கறிஞர் கொலை என்ற செய்திகள், நம் சமுதாயத்தில் காயங்களை உருவாகியுள்ளன என்று கர்தினால் போ அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக போர்ச் சூழலில் துன்புற்ற மியான்மார் நாடு, அண்மைய ஆண்டுகளில் விடுதலையை உணர்ந்துள்ளது என்றும், மீண்டும் இந்த நாடு வன்முறை வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றும், கர்தினால் போ தன் மேய்ப்புப்பணி மடலில் விண்ணப்பித்துள்ளார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.