2017-02-08 16:56:00

மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக விழிப்புணர்வு, செப நாள்


பிப்.08,2017. மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக விழிப்புணர்வு மற்றும் செப நாள், பிப்ரவரி 8, இப்புதனன்று, கத்தோலிக்கத் திருஅவையில் மூன்றாவது முறையாக சிறப்பிக்கப்படும் வேளையில், "அவர்கள் குழந்தைகள், அடிமைகள் அல்ல" என்ற சொற்கள், இவ்வுலக நாளின் மையக்கருத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித வர்த்தகத்திற்கு எதிராக பணியாற்றும் துறவியர் உலக அமைப்பு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, அனைத்துலக கத்தோலிக்கப் பெண்கள் கழகம், துறவு சபைகளின் உலகத் தலைவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நீதி அமைதி பணிக்குழு ஆகிய அனைத்தும் இணைந்து, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக விழிப்புணர்வு மற்றும் செப நாளை உருவாக்கின.

அடிமையாக விற்கப்பட்டு, புனிதமான துறவியாக இறந்த ஜோசப்பீனா பக்கீட்டா அவர்கள் திருநாளான, பிப்ரவரி 8ம் தேதியை, இவ்வுலக நாளாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ம் ஆண்டு உருவாக்கிய வேளையில், இந்த நாள், 154 நாடுகளில் கடைபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்புதனன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக விழிப்புணர்வு மற்றும் செப உலக நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், மிலான் உயர் மறைமாவட்டத்தில், ஒருநாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்தாலி நாட்டை வந்து சேரும் புலம்பெயர்ந்தோரில், 90 விழுக்காட்டினர் மனித வர்த்தகர்களின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றும், உலகெங்கும் தற்போது மனித வர்த்தகத்திற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை, 3 கோடியே 50 இலட்சம் என்றும், மிலான் உயர் மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.