2017-02-07 15:33:00

கடவுள் தம் சாயலில் தம் பிள்ளைகளாக நம்மைப் படைத்தார்


பிப்.07,2017. கடவுள், ஆணை, தம் சாயலில் படைத்தார், அவனை இப்பூமியின் முதலாளியாக ஆக்கினார், அவனை அன்புகூர, அவனின் விலாவிலிருந்தே உருவாக்கியப் பெண்ணைக் கொடுத்தார் என்று, கடவுள் தம் படைப்பில் மனித சமுதாயத்திற்கு அளித்த மூன்று கொடைகள் பற்றி, இச்செவ்வாய் காலை திருப்பலியில் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"ஆண்டவரே, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர். மாட்சியையும், மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டினீர்” என்ற திருப்பாடல் 8ல் வரும் திருச்சொற்களையும், தொடக்க நூலிலுள்ள ஆண்-பெண் படைப்பு பற்றிய பகுதியையும் மையப்படுத்தி, இச்செவ்வாய் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் தம் DNAவை, தம் சாயலை நமக்கு அளித்தார், அதாவது, அவர், தம் சாயலிலும், உருவிலும், தம்மைப் போலவே நம்மைப் படைத்தார் என்றும், ஒருவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, அது, தந்தையின் சாயலைக் கொண்டிருந்தாலும், கொண்டிருக்கவில்லையென்றாலும், அந்தக் குழந்தை அவரின் குழந்தையாக உள்ளது என்றும் கூறினார், திருத்தந்தை.

நாம் கடவுளின் பிள்ளைகளாக இருப்பதால், நாம் கடவுள்களைப் போல் இருக்கின்றோம் என்றும் கூறியத் திருத்தந்தை, தனது வேலையின் வழியாக, இப்பூமியைப் பாதுகாக்க வேண்டுமென்று, மனித சமுதாயத்திடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் மறையுரையில் கூறினார்.

படைப்பில் கடவுள் கொடுத்த மூன்றாவது கொடையாகிய அன்பு பற்றியும் விளக்கிய  திருத்தந்தை, அந்த அன்பு முதலில், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பகிரப்படும் அன்பிலிருந்து தொடங்குகிறது என்றும் கூறினார்.

கடவுள் நமக்கு அளித்துள்ள நம் தனித்துவம், கடமை, அன்பு ஆகிய, இந்த மூன்று கொடைகளுக்காகவும் நன்றி சொல்வோம், நம் பணியில் இந்தக் கொடைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவரிடம் அருள் வேண்டுவோம் என, தன் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.