2017-02-07 15:45:00

CCBIன் புதிய உதவி தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி


பிப்.07,2017. CCBI என்ற, இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் புதிய உதவி தலைவராக, சென்னை-மயிலைப் பேராயர், ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள், இத்திங்களன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின், போபாலில் நடைபெற்றுவரும் CCBI ஆயர் பேரவையின் 29வது நிறையமர்வு கூட்டத்தில், இப்பேரவையின் புதிய தலைவராக, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இப்பேரவையின் புதிய உதவி தலைவராக, சென்னை-மயிலைப் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களும், புதிய பொதுச் செயலராக, டெல்லி பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பணிக்காலம் ஈராண்டுகள் ஆகும்.

CCBI ஆயர் பேரவையின் தலைவராகப் பணியாற்றி வந்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு, அதன் தலைவராக, அனைத்து ஆயர் பிரதிநிதிகளாலும், ஒரே மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என, அப்பேரவையின் பேச்சாளர் தெரிவித்தார். ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவராகவும் பணியாற்றுகிறார், கர்தினால் கிரேசியஸ்.

மேலும், CCBI ஆயர் பேரவையின் புதிய உதவி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சென்னை-மயிலைப் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள், காம்பியா, லைபீரியா, சியெரா லியோன் நாடுகளுக்குத் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியிருப்பவர். 

130க்கும் மேற்பட்ட ஆயர்கள் கலந்துகொள்ளும், இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் 29வது நிறையமர்வு கூட்டம், பிப்ரவரி 8, இப்புதனன்று நிறைவடையும். 

ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.