2017-02-06 16:13:00

நற்செயல்களின் சாட்சியம் வழியே, உலகின் ஒளியாக விளங்க‌


பிப்.,06,2017. ஒவ்வொருவரும் இயேசுவின் ஒளியை, தங்கள் நற்செயல்களின் சாட்சியம் வழியாக பிரதிபலிப்பவர்களாக இருக்குமாறு, இறைவன் விரும்புகிறார் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் சீடர்களின் மறைப்பணி பற்றி பேசும்போது, 'உலகின் உப்பு',  ‘உலகின் ஒளி' என்ற உவமானங்களை இயேசு பயன்படுத்துவது பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து, மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவிடமிருந்து நாம் பெற்ற விசுவாச ஒளி எனும் கொடையை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டிய கடமையை உணர்ந்தவர்களாக செயல்படவேண்டும் என்றார்.

தன்னை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மாற்றத்தை வழங்கி, அவர்களை குணப்படுத்துவதுடன், மீட்பளிக்கும் நற்செய்தியின் ஒளியையும் நம் நற்செயல்கள் வழியாக பிரதிபலிப்போம் என்ற திருத்தந்தை, இயேசு நமக்கு வழங்கிய விசுவாசம் மற்றும் அன்பின் துணைகொண்டு வாழ்வுக்கு சுவையூட்ட வேண்டிய கடமையை வலியுறுத்தியே, நம்மை 'உலகின் உப்பு' என இயேசு உரைத்தார் என்றார்.

உலகின் உப்பாயிருங்கள் என்பது, சுயநலம், பொறாமை, புறம்பேசுதல் போன்ற கிருமிகளை ஒதுக்கி வைப்பதையும் குறிப்பிடுகிறது என்றார் திருத்தந்தை.

மற்றவர்களை வரவேற்கும் இடங்களாகவும், ஒப்புரவு மற்றும் ஒருமைப்பாட்டின் இடங்களாகவும் நம் சமூகங்கள் விளங்க வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொருவரும் ஒளியாகவும், உப்பாகவும் செயல்படுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.