2017-02-06 16:01:00

நம்பிக்கையுடையோரே, விசுவாச சாட்சிய சவாலை எதிர்கொள்பவர்கள்


பிப்.,06,2017. இத்திங்களன்று காலையில், அலக்சாந்திரியாவின் காப்டிக் வழிபாட்டுமுறை ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் வந்திருந்த அலக்சாந்திரியாவின் காப்டிக் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை  இப்ராஹிம் இசாக் செத்ராக் (Ibrahim Isaac Sedrak) அவர்களையும், அவருடன் வந்திருந்த ஆயர்களையும், திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை.

மேலும், 'நம்பிக்கையற்றோர், அல்லது, கடவுளைத் தேடாதவர்கள் என்பவர்கள், ஒருவேளை, தங்கள் வாழ்வில் ஒருபோதும், விசுவாச சாட்சியம் எனும் சவாலை எதிர்கொள்ளாதவர்கள்' என இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கால்பந்து எனப்படும் ரக்பி விளையாட்டுப் போட்டிகளின் Super Bowl இறுதிப் போட்டிக்கென தன் வாழ்த்துச் செய்தியை ஒளி-ஒலி காட்சியாக அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

விளையாட்டுக்கள் வழியாக, சந்திப்புக் கலாச்சாரத்தையும் உலக அமைதியையும் கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு Super Bowl என்ற இந்த போட்டி ஓர் உதாரணமாக உள்ளது என தன் செய்தியில் உரைத்துள்ள திருத்தந்தை, தன்னலம் தாண்டி, தியாகங்கள் குறித்துக் கற்றுக்கொள்ளவும், சட்டங்களை மதிக்கவும், அமைதி, நட்பு மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கவும் விளையாட்டுக்கள் உதவுகின்றன என தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.