2017-02-06 15:47:00

சட்டங்களின் வளையா நிலைகளுக்குள் மறைந்து கொள்ளாதீர்கள்


பிப்.,06,2017. சட்டங்களின் வளையா நிலைகளுக்குள் தங்களை மறைத்துக் கொள்ளாமல், அன்பின் அடிமைகளாக செயல்படும்படி, விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகை படைப்பதற்கு முன்னர் இறைவன் என்னச் செய்து கொண்டிருந்தார் என தன்னிடம் ஒரு சிறுமி கேட்டதாகவும், அதற்கு, தான், 'அவர் அன்புகூர்ந்து கொண்டிருந்தார்' என பதிலளித்ததாகவும் கூறினார்.

சட்டத்தின் வலிமையில் புகலிடம் தேடாமல், ஒவ்வொருவரும் தங்கள் இதயங்களைத் திறந்தவர்களாக செயல்படவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் இவ்வுலகை படைத்ததே, அதன் முழுமையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே என கூறினார்.

கடவுள் படைத்தவற்றுள் புகுந்த தீமைகளை அகற்றி, அதனை சீரமைக்கவும், புதுப்படைப்பாக்கவும் இறைவன் தன் மகனை அனுப்பினார் எனவும் உரைத்தார் திருத்தந்தை.

கடவுள் வழங்கும் கொடைகள், சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஏனெனில் அவை, அன்பின் கொடைகள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சட்டங்களின் வளையா நிலைகளுக்குள் அடைக்கலம் தேடுவோரே, இறைச்சட்டங்களை தங்கள் விருப்பம்போல் பெருக்கிக் கொண்டேச் செல்கின்றனர், எனவும் கூறினார்.

சட்டத்திற்கு அடிமையாக செயல்படாமல், அன்பின் அடிமைகளாக பணியாற்றுங்கள், ஏனெனில், நம் மீட்பும் மன்னிப்பும், இறையன்பினால் நமக்கு வழங்கப்பட்ட கொடைகள் என மேலும் உரைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.