2017-02-06 15:56:00

சகோதரர்களாக முழு ஒன்றிப்பை நோக்கிச் செல்வோம்


பிப்.,06,2017. முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையில், எவ்வித சோர்வுமின்றி, கிறிஸ்தவ சபைகள் நடைபோடுமாறு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெர்மன் நாட்டின் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் பிரதிநிதிகள் குழுவை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீர்திருத்தத்திற்கான சிலரின் குரல்கள், கிறிஸ்தவர்களிடையே பிளவுகள் உருவாவதற்கு காரணமாகிவிட்டது, கவலை தருவதாக உள்ளது என்றார்.

சீர்திருத்தத்திற்கான அழைப்பு விடப்பட்டதன் 500ம் ஆண்டை சிறப்பிக்கும் இவ்வேளையில், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையினரும், கத்தோலிக்கர்களும் ஒன்றிணைந்து, தங்கள் உறவுகளின் மையமாக கிறிஸ்துவை முன்னிறுத்தி உரையாடல்களை நடத்துவது, வரவேற்கத்தக்கது என்றார்.

கடந்த காலங்களின் கசப்புணர்வுகளை மறந்து, எல்லைகளற்ற இரக்கம் நிறைந்தவர் இறைவன் என்ற உணர்வுடன், சகோதரர்களாக முழு ஒன்றிப்பை நோக்கி முன்னோக்கிச் செல்வோம் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.