2017-02-04 15:14:00

பொதுக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


கதை, கவிதை உருவகங்களில் பேசுவது ஒரு தனி கலை. இக்கலையில் தன்னிகரற்றவர், இயேசு. உருவகங்கள், உவமைகள் வழியே அவர் கூறிய பல உண்மைகள், இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னும், நமக்குள் தாக்கங்களை உருவாக்கி வருகின்றன. இயேசு பயன்படுத்திய உருவகங்கள், தினசரி வாழ்விலிருந்து எடுக்கப்பட்டதால், அவற்றின் உதவியுடன் இயேசு சொன்ன உண்மைகள், நம் மனங்களில் ஆழமாய், பாடமாய் பதிந்துள்ளன.

இயேசுவின் படிப்பினைகள் பலவற்றைத் தொகுத்து, மத்தேயு, தனது நற்செய்தியில்  5,6,7 ஆகிய மூன்று பிரிவுகளில் மலைப்பொழிவாகத் தந்துள்ளார். இப்பகுதியில் சென்ற வாரம் நம் ஆன்மீகப் பயணத்தைத் துவக்கினோம். அடுத்த மாதம் நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்கு ஏற்ற ஒரு தயாரிப்பாக, மலைப்பொழிவின் வெவ்வேறு பகுதிகளை ஒவ்வொரு ஞாயிறும் கேட்கவிருக்கிறோம்.

இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியில் இயேசு இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்று இயேசு தன்னைச் சூழ்ந்திருந்த மக்களிடம் கூறியுள்ளார். உப்பும், விளக்கும் இல்லாத வீடுகள் இல்லை. ஏழை, பணக்காரன், அரசன் ஆண்டி, என்ற பாகுபாடுகள் ஏதும் இன்றி, எல்லா வீடுகளிலும் பயன்படுவது உப்பும், விளக்கும். இயேசு கூறிய இவ்விரு உருவகங்களையும் ஆழமாய் அலசுவது பயனளிக்கும்.

உப்பு எவ்விதம் உருவாகிறது என்பதை எண்ணும்போது, அதை, தூய்மைக்கு அடையாளமாகப் புரிந்துகொள்ளலாம். இயற்கையில் இறைவன் வழங்கியுள்ள இருபெரும் கொடைகளான சூரிய ஒளி, கடல் நீர் இரண்டும் இணைந்து, உப்பு உருவாகிறது. அதேபோல், ஒளியும், தூய்மைக்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. நாம் ஏற்றிவைக்கும் ஒளி, மெழுகிலிருந்து உருவானாலும், எண்ணெயிலிருந்து உருவானாலும், இன்னும் பல பொருள்களிலிருந்து உருவானாலும், எரிகின்ற சுடர், எவ்வித வேறுபாடுமின்றி, தூய்மையான ஒளியைச் சிந்துகிறது.

உப்பு, ஒளி என்றதும், தூய்மை நம் மனதில் முதலில் பதிவதால், "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்று, இயேசு, இவற்றை நமக்கு ஒப்புமைப்படுத்த தயங்கவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்ற இந்தக் கூற்றின் ஆழத்தை உணர, உப்பாக இருப்பது என்றால் என்ன? மண்ணுலகிற்கு உப்பாக இருப்பது என்றால் என்ன? என்ற இரு கேள்விகளை எழுப்பலாம்.

உப்பின் அரிய குணங்களை நன்கு அறிந்திருந்த இயேசு, தன்னைப் பின்பற்றுவோருக்கு அக்குணங்களை ஒப்புமைப்படுத்துகிறார். இயேசுவைப் பின்பற்றுவோர், உலகின் உப்பாக இருக்கின்றனர் என்றால், அதன் பொருள் என்ன?

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று சொன்ன அதே மூச்சில், இயேசு ஓர் எச்சரிக்கையையும் தருகிறார். உணவுக்குச் சுவைசேர்க்கும் உப்பே சுவையிழந்து போனால் பயனில்லை என்று இயேசு எச்சரிக்கிறார். உப்பு எவ்விதம் தன் சுவையை இழக்கும்? உப்புடன் பிற மாசுப் பொருட்கள் கலந்தால், சூரிய வெப்பத்தால் உப்பு அதிகம் தாக்கப்பட்டால், அது, தன் சுவையை இழந்துவிடும். இயேசுவைப் பின்பற்றுவோரும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகி, தளர்ந்து, உலகச் சக்திகளால் ஈர்க்கப்பட்டால், தாக்கப்பட்டால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயனற்ற உப்பாக மாற வாய்ப்புண்டு. சுவையிழந்த, பயனற்ற உப்பு, வெளியில் கொட்டப்படும், மனிதரால் மிதிபடும்.

மிதிபடும் உப்பைப்பற்றிச் சிந்திக்கும்போது, நம் மனதில் வேறொரு எண்ணமும் எழுகிறது. உணவுக்கு உயிரோட்டமாய் இருக்கும் உப்பு, தன்னை முற்றிலும் மறைத்து, கரைத்து உணவுக்குச் சுவை சேர்க்கிறது. அதேபோல், உலகில் எத்தனையோ மக்கள் இந்த உலகின் உயிர் நாடிகளாய் இருக்கின்றனர். அவர்கள் இல்லையேல் உலகம் இயங்காது என்பது உண்மை. ஆனால், அவர்கள் ஒருபோதும் உலகின் நடுநாயகமாய் வைக்கப்படுவதில்லை.

உலகெங்கும் துப்புரவுத் தொழிலில் ஈடுப்பட்டுள்ள பலகோடி மக்களை இந்நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். யாருடைய கவனத்தையும், எந்த ஒரு விளம்பரத்தையும் தேடாமல், ஒவ்வொரு நாளும் பணி செய்யும் இவர்கள், ஒரு நாள் மட்டும் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டால், உலகின் நிலை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! அண்மையில் தமிழக இளையோர் 'ஜல்லிக்கட்டு' வேண்டி மேற்கொண்ட போராட்டத்தில், அவ்வப்போது, ஆங்காங்கே உழவர்கள் குறித்த சிந்தனைகளும் எழுந்தன. மனிதர்களால் அடிக்கடி மறக்கப்படும் உழவர்கள், மனிதர்களை மறந்துவிட்டால், இவ்வுலகம் என்னாகும்?

உலகின் உப்பாக இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஏர் பிடிக்கும் உழவர்கள் போன்ற, பல கோடி தொழிலாளர்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். மண்ணில் மிதிபடும் உப்பைப்போல் வாழ்நாளெல்லாம் மிதிபடும் இவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கும் மனம் நமக்கு வேண்டும்; உலகமும் இவர்களுக்கு உரிய மதிப்பை வழங்கவேண்டும் என்று செபிப்போம்.

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்பது, இயேசு வழங்கும் அடுத்த உருவகம். ‘ஒளி’ என்ற சொல்லைக் கேட்டதும், ‘இருள்’ என்ற சொல், தானாகவே நம் எண்ணத்தில் தோன்றும். இருள் சூழும்போதுதானே ஒளியைப்பற்றி, விளக்கைப்பற்றி நாம் எண்ணிப்பார்ப்போம். நடுப்பகலில் விளக்கைப்பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

உணவில் கலக்கப்படும் உப்பைப்போல, இருளில் ஏற்றப்படும் விளக்கு, தன்னையே விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. தன்னை வெளிச்சமிட்டு காட்டாமல்,  சுற்றியுள்ளவற்றை வெளிச்சத்திற்கு கொணர்வதே, விளக்கின் முக்கியப் பணி.

மெழுகுதிரியோ, அகல்விளக்கோ, மின்விளக்கோ, எவ்வடிவத்தில் விளக்கு இருந்தாலும், அது தன்னையே அழித்துக் கொள்ளும்போதுதான், வெளிச்சம் தரமுடியும். தன்னைக் கரைக்க மறுக்கும் உப்பு, சுவை தர முடியாததுபோல், தன்னை அழிக்கவோ, இழக்கவோ மறுக்கும் விளக்கு, ஒளி தரமுடியாது.

உலகிற்கு ஒளியாக இருப்பவர்களும் தங்களையே அழித்துக்கொள்ள முன்வரவேண்டும். தங்களை முன்னிலைப்படுத்தி, விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச்சுற்றி இருப்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

மரக்காலுக்குள் வைக்காமல், விளக்குத் தண்டின்மீது வைக்கப்படும் விளக்கே வீட்டை ஒளிமயமாக்கும். அதேபோல், உலகிற்கு ஒளியாக இருக்கும் நாமும், நம் திறமைகளை உலகறியச் செய்யவேண்டும். இப்படிச் செய்வது, நம் திறமைகளுக்கு நாம் தரும் விளம்பரம் அல்ல, மாறாக, நமது திறமைகள் வழியே, பிறர் வாழ்வில் ஒளி சேர்ப்பதே நம் எண்ணம்.

இயேசுவின் இவ்விரு கூற்றுக்களில் புதைந்துள்ள மற்றொரு நுணுக்கமான உண்மையும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்க வேண்டும் என்றோ, உப்பாக, ஒளியாக மாறுங்கள் என்றோ இயேசு கூறவில்லை. "நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள்" என்று இயேசு கூறியுள்ளார். உன்னத பண்புகள் பலவற்றைக் கொண்ட உப்பாக, ஒளியாக நாம் இருக்கிறோம் என்று, நம்மீது இயேசு கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைக்கு ஏற்ப, உப்பாக, ஒளியாக வாழ்வோம்.

உப்பாக, ஒளியாக வாழ்வதென்பது, தனக்குள் தானே நிறைவுகண்டு, தன்னிலேயே தங்கிவிடும் வாழ்வு அல்ல. குப்பியிலோ, கிண்ணத்திலோ வைக்கப்பட்டிருக்கும் உப்பு, அங்கேயே இருக்கும்வரை, பயன்தராது. அது எப்போது, குப்பியிலிருந்து வெளியேறி, உணவுடன் கலக்கிறதோ, அப்போதுதான், உப்பு, தான் உருவானதன் பயனை அடைகிறது. அதேபோல், மரக்காலுக்குள் வைக்கப்படாமல், விளக்குத் தண்டின் மீது வைக்கப்படும் விளக்கே, "வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளிதரும்" என்றும் இயேசு கூறியுள்ளார்.

சுயநல வட்டத்தைவிட்டு வெளியேறினால் மட்டுமே திருஅவை பயன் தர முடியும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ், தன் உரைகளில் அடிக்கடி கூறி வருகிறார். கோவில்களில் அடைபட்டு, மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் பாதுகாப்பு உள்ளதென்று உணரும் திருஅவை பயனற்றது என்று, திருத்தந்தை தெளிவாகக் கூறியுள்ளார். உணவு தன்னைத் தேடி வரவேண்டும் என்று உப்பு காத்திருந்தால், பயன்தராது என்பதுபோல, மக்கள் தன்னைத் தேடி வரவேண்டும் என்று, அருள்பணியாளர்கள், 'சாமியார் பங்களா'க்களில் காத்திருப்பது பயனற்றது என்பதை, திருத்தந்தை, தன் உரைகளில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இன்றைய உலகில், தடுப்புச் சுவர்களை எழுப்பி, தங்கள் சமுதாயத்தைப் பாதுகாக்க, ஒரு சில தலைவர்கள் முற்படும் வேளையில், பாலங்கள் கட்டுவது ஒன்றே, திருஅவையின் தலையாயப் பணி என்று திருத்தந்தை கூறி வருகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 4 ஆண்டுகளுக்குமுன், Civiltà Cattolica என்ற இதழுக்கு வழங்கிய நேர்காணலில், "எவ்வகையான திருஅவையை நீங்கள் கனவு காண்கிறீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, "போர்க்களத்தில் செயல்படும் ஒரு மருத்துவமனையைப் போல திருஅவையை நான் காண்கிறேன். அதிகமாக அடிபட்டு கிடக்கும் ஒருவரிடம், அவரது இரத்தக் கொழுப்பு (Cholesterol), இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு என்ன என்ற கேள்விகள் கேட்பது வீண். அவரது காயங்களை முதலில் குணமாக்க வேண்டும். பின்னர் ஏனையவை குறித்து நாம் பேசலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலிருந்து திருஅவை தன் பணிகளைத் துவக்கவேண்டும்" என்று தெளிவாகக் கூறினார்.

போர்க்களமாக மாறியிருக்கும் இன்றைய உலகில், திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும், காயப்பட்டிருக்கும் உலகை நலம்பெறச் செய்யும் உப்பாகவும், வெறுப்பென்ற இருளில் மூழ்கியிருப்போருக்கு நல்வழி காட்டும் ஒளியாகவும் திகழவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.