2017-02-03 15:57:00

துறவியர் உலக நாளன்று திருத்தந்தை வழங்கிய மறையுரை


பிப்.03,2017. இறைவன் வாக்கு மாறாதவர் என்ற காரணத்தால், வாழ்வில் நம்பிக்கை கொண்டிருப்பது சிறந்தது என்பதை, வயதில் முதிர்ந்த சிமியோன், அன்னா ஆகியோரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் மாலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

அர்ப்பண வாழ்வை மேற்கொண்டோர் உலக நாள், பிப்ரவரி 2, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, மாலை 5.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், துறவியருக்காக சிறப்புத் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

நமது முன்னோர் நமக்கு வழங்கியுள்ள நம்பிக்கை கனவுகளை, நமது வாழ்நாளில் எடுத்துரைத்து, நாம் சந்திக்கும் மற்றவர்கள் உள்ளத்தில் நம்பிக்கைச் சுடரை ஏற்றிவைப்பது நமது கடமை என்று, திருத்தந்தை எடுத்துரைத்தார்.

அர்ப்பண வாழ்வை கடந்தால் போதும் என்ற எண்ணத்துடன், இவ்வாழ்வை ஆர்வமின்றி வாழும் சோதனைக்கு இடம் தரும் துறவியர், தங்கள் உள்ளத்தை மூடியவர்களாக, வாழ்வை பயன் ஏதுமின்றி கழிக்கின்றனர் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

இத்தகைய ஆர்வமற்ற மனநிலை, கனவுகளையும், அவற்றுடன் வரும் சவால்களையும் நிராகரித்து, நற்செய்தியை பரப்புவதற்கு, வழங்கப்படும் பணியையும் நாம் இழப்பதற்கு வழி வகுக்கிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

தன் மக்களுடன் கலந்து, கரைந்து வாழ்ந்த இயேசு, நம்மையும் அத்தகைய கரைதலுக்கு அழைக்கிறார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவுடன் இணைந்து நாமும் மக்களைச் சந்திக்கச் செல்வோம் என்று தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.