2017-02-03 16:19:00

டிரம்ப் அரசாணையைக் கண்டித்து, இயேசு சபையினர் அறிக்கை


பிப்.03,2017. மக்கள் நடுவே மனசாட்சியையும், மனிதாபிமானத்தையும் உருவாக்குவதற்கென, உலகெங்கும் பணியாற்றும் ஒரு துறவு சபையின் உறுப்பினர்கள் என்ற முறையில், புலம் பெயர்ந்தோரை தடுக்கும் வகையில், அரசுத் தலைவர் டிரம்ப் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையை, நாங்கள் கண்டனம் செய்கிறோம் என்று, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடாவில் பணியாற்றும் இயேசு சபையினர் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மதம் என்ற அடிப்படையில் நோக்காமல், புலம் பெயர்ந்தோர் அனைவரோடும் பல ஆண்டுகளாகப் பயணம் செய்து வரும் இயேசு சபையினர், குறிப்பாக, இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணி வழியே ஆற்றிவரும் பணிகள் குறித்து, நாங்கள் உண்மையில் பெருமிதம் கொள்கிறோம் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், இன்னும் உலகெங்கும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்ற அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும், கடவுளின் மக்கள் என்ற ஒரே கண்ணோட்டத்துடன் நோக்கி, அவர்களுக்குப் பணியாற்றுவதை தொடர்வோம் என்று இவ்வறிக்கையில் இயேசு சபையினர் உறுதி கூறியுள்ளனர்.

பல்வேறு கலவரங்களுக்கு உள்ளாகியிருக்கும் இவ்வுலகில், மக்கள் பெரும் அச்சங்களால் சூழப்பட்டிருப்பதை நாங்கள் அறிவோம் என்றும், அந்நியரை வரவேற்பது என்ற பணி வழியே எங்கள் கிறிஸ்தவ, மற்றும் இயேசு சபை அழைப்பை நாங்கள் உணர விழைகிறோம் என்றும், இவ்விரு நாட்டு இயேசு சபையினரும் கூறியுள்ளனர்.

ஆதாரம் : SJWeb / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.