2017-02-03 16:04:00

குடும்பப் பணிகளில் ஈடுபட இந்திய ஆயர்களுக்கு அழைப்பு


பிப்.03,2017. குடும்பங்களுக்கென மேற்கொள்ளப்படும் பணிகளில், இந்திய ஆயர்கள், புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் ஈடுபடுமாறு, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் போபால் நகரில் நடைபெறும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்களின் 29வது நிறையமர்வு கூட்டத்தில், பிப்ரவரி 1, இப்புதனன்று, உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலர், கர்தினால் லொரென்சோ பால்திசேரி அவர்கள் வழங்கிய மறையுரையில் இவ்வாறு விண்ணப்பித்தார்.

"அன்பின் மகிழ்வை நம் குடும்பங்களில் வளர்த்தல்" என்ற மையக் கருத்துடன் நடைபெற்றுவரும் இக்கருத்தரங்கில், குடும்பங்களைப் பேணி வளர்க்கும் பெற்றோரின் பணி மிகக் கடினமானது என்று எடுத்துரைத்தார்.

குடும்ப வாழ்வைக் குலைக்கும் வகையில், இன்று உலகெங்கும் கருத்தளவில் போர்கள் நிகழ்ந்து வருகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பால்திசேரி அவர்கள், குழந்தைகளோடு பெற்றோர் செலவழிக்கும் நேரமே அவர்களுக்கு வழங்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு என்று கூறினார்.

குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கித் தருவது பெற்றோரின் கடமை அல்ல என்று கூறிய கர்தினால் பால்திசேரி அவர்கள், தேவைப்படும் நேரத்தில் குழந்தைகளிடம் 'இல்லை' என்பதை கண்டிப்புடன் எடுத்துரைக்கவும் பெற்றோர் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி 1ம் தேதி மாலையில், இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்களுக்கென, புனித அன்னை தெரேசாவை மையப்படுத்தி ஒரு நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று CCBI செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.