2017-02-02 15:51:00

ஜப்பானில், பேராயர் பால் ரிச்சர்ட் காலகரின் பயணம்


பிப்.02,2017. திருஅவையின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள், திருஅவைக்கு மட்டுமல்ல, சூழ இருக்கும் சமுதாயத்திற்கும் சிறந்த பணியாற்றுகின்றன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் தலைவர், பேராயர், பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், சனவரி 27, கடந்த வெள்ளிக்கிழமை முதல், பிப்ரவரி 3, இவ்வெள்ளி முடிய ஜப்பான் நாட்டில் மேற்கொண்டு வரும் ஒரு பயணத்தின்போது, பிப்ரவரி 2, இவ்வியாழனன்று, டோக்கியோ நகரில் இயங்கிவரும் சோபியா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

பல்கலைக் கழகங்கள், இளையோரின் அறிவை மட்டும் வளர்க்காமல், முழு மனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விடுத்த ஓர் எச்சரிக்கையை, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள், குறிப்பாக, இயேசு சபையினரால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்கள், திருத்தந்தையின் அழைப்பிற்கிணங்க, சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்று, பேராயர் காலகர் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

அறிவியலுக்கும், கலாச்சாரத்திற்கும் அடித்தளமாக பல்கலைக்கழகங்கள் இயங்கி வரவேண்டும் என்பதை எடுத்துரைத்த பேராயர் காலகர் அவர்கள், நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பண்பான அமைதியை இளையோருக்கு சொல்லித்தருவது, பல்கலைக்கழகங்களின் முக்கியக் கடமை என்று கூறினார்.

1913ம் ஆண்டு, இயேசு சபையினரால், டோக்கியோ நகரில் உருவாக்கப்பட்ட சோபியா பல்கலைக்கழகம், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, அந்நாட்டில் இயங்கிவரும் தனியார் பல்கலைக்கழகங்களில் முதன்மை நிலை பெற்றுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.