2017-02-02 15:58:00

கனடா நாட்டு படுகொலைகளில் இறந்தோருக்கு திருப்பலி


பிப்.02,2017. கனடா நாட்டில் கெபெக் (Quebec) மாநகரின் இஸ்லாமிய கலாச்சார மையத்தில், கடந்த ஞாயிறன்று நிகழ்ந்த படுகொலைகளில் இறந்தோருக்கு செபிப்பதற்கென, சனவரி 31, இச்செவ்வாயன்று கெபெக், இஸ்லாமிய கலாச்சார மையத்திற்கு அருகே அமைந்துள்ள நோத்ரு தாம் மரியன்னை ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

கெபெக் பேராயர், கர்தினால் Gérald Cyprien Lacroix அவர்கள் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில், அரசு அதிகாரிகளும், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.

இந்தப் படுகொலையின் தாக்கத்தால் வீழ்ந்திருக்கும் நாம், இறைவனின் துணையோடு எழுந்து நின்று, ஒன்றிணைந்த, அமைதியான சமுதாயத்தை கனடா நாட்டில் உருவாக்குவோம் என்று, கர்தினால் Lacroix அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

இஸ்லாமிய கலாச்சார மையத்தை நிறுவியவர்களில் ஒருவரான Boufeldja Benabdallah அவர்கள், தான் கெபெக் நகரில் 48 ஆண்டுகளாக வாழ்ந்துவருவதாகவும், அந்நகரின் மக்கள் சமாதானத்தை விரும்புகிறவர்கள் என்பதில் தன் நம்பிக்கை குறையவில்லை என்றும் இத்திருப்பலியின் துவக்கத்தில் கூறினார்.

கொலையுண்டவர்களின் குழந்தைகள், வெறுப்பை வளர்க்காமல், அன்பில் வளர்வதற்கு, கெபெக் சமுதாயம் விழிப்புணர்வுடன் செயலாற்றவேண்டும் என்று, Benabdallah அவர்கள் விண்ணப்பித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.