2017-02-01 16:06:00

மத பாகுபாடுகள் காட்டுவது, தீவிரவாதத்தை வளர்க்கின்றது


பிப்.01,2017. மதத்தின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது, அடிப்படைவாதத்தையும், தீவிரவாதத்தையும் வளர்க்கின்றது என்று, சிரியாவின் அலெப்போ நகரில் பணியாற்றும் இயேசு சபை ஆயர், அந்துவான் அவுதோ (Antoine Audo) அவர்கள், பீதேஸ் (Fides) செய்தியிடம் கூறினார்.

கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற வேறுபாடுகளை வளர்த்து, வெறுப்பை உருவாக்கும், உரைகள், அரசாணைகள் அனைத்தையும், மத்தியக் கிழக்குப் பகுதியில், குறிப்பாக, சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று  கல்தேய வழிபாட்டு முறை ஆயர் அவுதோ அவர்கள் எடுத்துரைத்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அண்மையில் வெளியிட்ட அரசாணைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஆயர் அவுதோ அவர்கள், சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்கள், அடுத்த நாடுகளில் அடைக்கலம் புகுவதைக் காட்டிலும், தங்கள் சொந்த நாட்டில் அமைதியில் வாழ்வதற்கே வேற்று நாடுகளின் உதவிகளைக் கேட்கின்றனர் என்று வலியுறுத்திக் கூறினார்.

அலெப்போ நகரில் தற்போது நிலவும் பாதுகாப்பைப் பயன்படுத்தி, அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் அனைவரையும் கலந்துபேசி, நிரந்தரமான அரசியல் தீர்வு உண்டாவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று கல்தேய வழிபாட்டு முறை ஆயர் அவுதோ அவர்கள் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.