2017-01-31 15:56:00

நற்செய்தி அறிவிக்க பொதுநிலையினருக்கு திருத்தந்தை அழைப்பு


சன.31,2017. பொதுநிலை கத்தோலிக்கர், தங்களின் இல்லங்களிலிருந்து வெளியே வந்து, நற்செய்தி அறிவிப்புப் பணியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பொதுநிலை கத்தோலிக்கரின் மறைப்பணி பற்றி, ESNE TV மற்றும் வானொலி (El Sembrador Nueva Evangelización) நிருபர் Noel Díaz அவர்களுக்கு, அண்மையில் அளித்த நேர்காணலில், இவ்வாறு கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநிலையினர் தங்களுக்குள்ளே முடங்கி கிடக்காமல், வெளியே சென்று, இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்று கூறினார்.

இயேசுவின் நற்செய்தியை, ஒரு சகோதரர் அல்லது ஒரு சகோதரி வழியாக, தான் பெற்றுக்கொண்டதுபோன்று, அதை மற்றவருக்கும் வழங்க வேண்டுமென்று கூறியத்   திருத்தந்தை, தனக்குக் கிடைக்கின்ற அருளை, பிறருக்குக் கொடுக்க வேண்டுமென்றும் கூறினார்.

பவுலடிகளாரின் திருத்தூது ஆர்வத்தைப் போன்று, கிறிஸ்தவர்களும் நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம் காட்டுமாறும் கூறியத் திருத்தந்தை, நற்செய்தியை துணிச்சலோடு அறிவிப்பதற்கு, செபம் இன்றியமையாதது என்றும், செபமின்றி, துணிச்சல் வராது என்றும் கூறினார். செபம் நம்மை இறைவனோடு இணைப்பதால், நாம் எப்போதும் செபத்துடன் செல்ல வேண்டும் என்றும், நேர்காணலில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ESNE தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கு, 2016ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி திருத்தந்தை வழங்கிய இந்த நேர்காணல், சனவரி 29, இஞ்ஞாயிறன்று வெளியானது.

ஆதாரம்: CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.