2017-01-31 15:49:00

கியுபெக் மசூதி தாக்குதலுக்கு பல்சமயத் தலைவர்கள் கண்டனம்


சன.31,2017. கியுபெக் நகரில், தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து, பல நாடுகளின் பல்சமய மற்றும், அரசியல் தலைவர்கள், தங்களின் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

கியுபெக் கர்தினால் Lacroix, Montreal பேராயர் Christian Lepine, ஆங்லிக்கன் சபை பேராயர்கள், மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் உட்பட, பல தலைவர்கள் தங்களின் கடும் கண்டனங்களையும், இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், தங்களின் செபங்களையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளனர்.

கானடாவின் இரண்டாவது பெரிய நகரமான கியுபெக்கில், ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இவர்களில், 6,100 பேர் முஸ்லிம்கள்.

கியுபெக் மசூதியில் இடம்பெற்ற, இத்துப்பாக்கிச்சூடு தாக்குதலையொட்டி, 27 வயது நிரம்பிய Alexandre Bissonnette என்ற பல்கலைக்கழக மாணவரைக் கைது செய்துள்ளது காவல்துறை. இந்த மாணவர், பிரெஞ்சு மொழி பேசும் கானடா நாட்டவர் ஆவார்.

இதற்கிடையே, உலகில், நசுக்கி ஒடுக்கப்படும் மக்கள், தங்கள் நாட்டுக்கு வரலாம் என, கானடா பிரதமர் Justin Trudeau அவர்கள், கடந்த வாரத்தில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: Agencies/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.