2017-01-30 16:04:00

வாரம் ஓர் அலசல் – பிறர் துன்பம் கண்டு மனம் கசிவோர்


சன.30,2017. நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது, விழா நாயகர்கள் அன்புடன் வரவேற்கின்றனர் என்று எழுதப்பட்ட அன்பான வரவேற்பு வாசகங்களை, வாசிக்கும்போது நமக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், வந்தாரை வாழ வைக்கும் வவுனியா... இப்படி, ஒவ்வொருவரும், அவரவர் பகுதியைப் பெருமையாகச் சொல்வதுண்டு. அமெரிக்க ஐக்கிய நாடு பற்றியும், இப்படியோர் எண்ணம், பரவலாக நிலவுகிறது. படித்த மற்றும் படிக்காத மக்களுக்குக்கூட, அமெரிக்கா என்றால், இன்று வரை, ஒரு ஏக்கப்பார்வை இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்கா சென்றுவிட்டால், எப்படியாவது முன்னேறி விடலாம் என்ற மனக்கணக்கு, பலருக்கு உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அரசுத்தலைவராக, சனவரி 20ம் தேதி பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் அவர்கள், கடந்த வாரத்தில் அறிவித்துள்ள ஓர் உத்தரவு, இப்படியோர் மனக்கோட்டையில் விரிசல் ஏற்படுத்தியிருப்பதாக, பல தலைவர்களிடமிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழும்பியுள்ளன.  

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குத் தெற்கில் அமைந்துள்ள மெக்சிகோ நாடு வழியாக, ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க ஏறக்குறைய 670 மைல் (1078.26 கி.மீட்டர்) தொலைவுக்கு, பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விரு நாடுகளின் எல்லையில் மிகப்பெரிய சுவர் எழுப்பப்படும் என்று, டிரம்ப் அவர்கள் அறிவித்து, இதற்கான ஒப்பந்தங்களிலும், கடந்த வாரத்தில் கையெழுத்திட்டுள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தொடர்பான ஒப்பந்தத்திலும், ட்ரம்ப் அவர்கள் கையெழுத்திட்டார். ஏறக்குறைய ஒரு கோடியே, பத்து இலட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களில் குற்றப் பின்னணி உடையவர்களை, அவர்களின் சொந்த நாட்டுக்கு உடனடியாகத் திருப்பி அனுப்ப அரசுத்தலைவர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி ட்ரம்ப் அவர்கள் அளித்துள்ள பேட்டியில்,

எல்லைகள் இல்லையென்றால் அது நாடு இல்லை. எனது ஆட்சிக் காலத்தில் நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். குறிப்பாக, தென்பகுதி எல்லைப் பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும். அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நடவடிக்கைகள் சில மாதங்களில் தொடங்கும். இதற்கான முழு செலவையும் மெக்சிகோ ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் சிக்கும் பிணைக்கைதிகள் கொடூரமாகத் துன்புறுத்தப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். என்னைப் பொறுத்தவரை நெருப்பை நெருப்பால்தான் அணைக்க முடியும். எனவே “ Waterboarding”உள்ளிட்ட விசாரணை நடைமுறைகளை முழுமையாக ஆதரிக்கிறேன். செப்டம்பர் 9ம் தேதி தாக்குதலுக்குப் பிறகு நிறைய அயல்நாட்டுக் குடிமகன்கள், பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்...

இவ்வாறெல்லாம், டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார். “அமெரிக்க புலம்பெயர்ந்தோர் உள்நுழைவு அனுமதி திட்டம்”என்ற பெயரில், ஏழு முஸ்லிம் நாடுகளிலிருந்து வருவோருக்கு, மூன்று மாதங்களுக்கு, ட்ரம்ப் அரசு கெடுபிடிகளை விதித்துள்ளது. மேலும், புலம்பெயர்ந்தோரின் வரவும் ஐம்பதாயிரம் எனக் குறைக்கப்பட்டுள்ளது. அரசுத்தலைவர் ஒபாமா காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ஒரு இலட்சத்து பத்தாயிரம் புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஈராக், ஈரான், சிரியா, ஏமன், சொமாலியா, சூடான், லிபியா ஆகிய ஏழு நாடுகள் ட்ரம்ப் அவர்களின் உத்தரவினால் கடுமையாக பாதிப்படைவதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ‘அமெரிக்க சுதந்திரா தேவி சிலையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது’என்று, ஊடகங்கள் குறை கூறியுள்ளன.

அமெரிக்க ஐக்கிய நாடே புலம்பெயர்ந்தவர்களின் குடியேற்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு என்பது வரலாறு. அந்நாட்டில், 1600ம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பிய குடியேற்றங்கள் உருவாகத் தொடங்கின. 1770களில், பிரித்தானியாவைச் சேர்ந்த 25 இலட்சம் மக்கள், பதின்மூன்று குடியேற்றங்களில் வாழ்ந்தனர். அவர்கள் வளமாக வாழ்ந்து, தங்களுக்கென தனிப்பட்ட அரசியல் மற்றும் சட்ட விதிமுறைகளைக் கொண்டிருந்தனர். பிரித்தானிய நாடாளுமன்றம், இந்தக் குடியேற்றங்கள் மீது, தனது அதிகாரத்தை நிலைநாட்டி புதிய வரிகளை விதித்தது. தங்களுக்குச் சார்பாண்மை இல்லாத பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இச்செயல் சட்டவிரோதமானது என, இதனை அமெரிக்கர்கள் எதிர்த்தனர். சிறுசிறு கிளர்ச்சிகள் பெரிதாகி, 1775ம் ஆண்டு ஏப்ரலில் முழுமையானப் போராக உருவானது. 1776ம் ஆண்டு ஜூலை 4ம் தேதியன்று, இக்குடியேற்றங்கள் தங்களை, பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்ற தனி நாடாக அறிவித்தன. Thomas Jefferson அவர்கள் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அமெரிக்க ஐக்கிய நாடு உருவானது. எனவே, அமெரிக்காவை, அடைக்கலம் தரும் நாடாகவே, உலகில், இன்றும் பலர் நோக்குகின்றனர். அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களின் இந்த உத்தரவு குறித்து, அமெரிக்க குடியுரிமைகள் சங்கத் தலைவர் ஆண்டனி டி.ரொமிரோ கூறும்போது, “முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட குறிப்பிட்ட நாடுகளை அடையாளப்படுத்தி, சிறுபான்மை மதத்தினருக்கு விதிவிலக்கு அளிப்பதன் வழியாக, எந்த ஒரு மதப்பாகுபாடும் காட்டக் கூடாது என்ற அமெரிக்க அரசியலமைப்பு விதிமுறைகளை ட்ரம்ப் மீறியுள்ளார்,  புலம்பெயர்ந்தோரை அன்புடன் வரவேற்கும் மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட அமெரிக்கா உருவான நாள் முதல், இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.

சிரியாவில் நடைபெற்றுவரும் போர் காரணமாக, 48 இலட்சம் புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவுக்கும், அண்டை நாடுகளுக்கும் புகலிடம் தேடி அலைந்துள்ளனர்.. சிரியாவுக்குள் மட்டுமே 66 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் உலக நாடுகளின் பொறுப்புகளிலிருந்து அமெரிக்கா தன்னை பொறுப்பற்ற முறையில் விடுவித்துக் கொண்டுள்ளது என்றும் அமெரிக்க குடியுரிமை அமைப்புகள் ட்ரம்பைச் சாடியுள்ளன. மேலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான் ஆகிய நாடுகள், இந்த உத்தரவின்கீழ் வரவில்லை. மாறாக ஏமனில் சண்டையிட, ட்ரம்பின் முதல் ஆயுத ஒப்பந்தம், சவுதி அரேபியாவுடன்தான் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே, ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றக்கூடாது என, நியூயார்க், வெர்ஜினியா நீதிமன்றங்கள் இடைக்கால உத்தரவிட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசுத்தலைவரின் இந்த அறிவிப்பு வெளியான பின்னர், கானடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு (Justin Pierre James Trudeau) அவர்கள், தனது டுவிட்டர் பக்கத்தில், வெல்கம் டூ கானடா என்று பதிவு செய்துள்ளார். அடக்குமுறை, போர் மற்றும் பயங்கரவாதத்திற்குப் பயந்து வருபவர்களை, கானடா வரவேற்கும். பன்முகத்தன்மை எங்கள் பலம் என்று அதில் கூறியுள்ளார் கானடா பிரதமர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், "உள்ளத்தில் ஏழையராய் இருக்கும் கிறிஸ்தவர், தன்னையும், தனது உலக செல்வத்தையும் சார்ந்து இராதவர், தன் சொந்தக் கருத்துக்களைத் திணிக்காதவர், மாறாக, பிறர் சொல்வதற்கு, மரியாதையுடன் செவிசாய்ப்பவர், பிறரின் தீர்மானங்களுக்கு மனதார விட்டுக்கொடுப்பவர்”என்று சொன்னார். இயேசுவின் மலைப்பொழிவு ஆசீர்வாதங்கள் பற்றி விளக்கியபோது இவ்வாறு கூறியத் திருத்தந்தை, நம் சமூகங்களில் ஏழையரின் உள்ளம் கொண்டோர் அதிகமாக இருக்கும்போது, பிளவுகளும், சண்டைகளும், கருத்து முரண்பாடுகளும் குறைவாக இருக்கும் என்றும் சொன்னார்.

சனவரி 30, இத்திங்கள், மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள். மத நல்லிணக்கம், மனிதநேயம், மக்கள் ஒற்றுமை போன்ற, காந்திஜி விட்டுச்சென்ற விழுமியங்களை, இதுவரை எந்தத் தீய சக்திகளாலும் அழிக்க முடியவில்லை என்பதே வரலாறு. அண்மை மெரினா கடற்கரை இளையோர் அறவழிப் போராட்டம் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. “ஒரு டன் அளவுக்கு போதனை செய்வதைவிட ஒரு அவுன்ஸ் அளவு, பின்பற்றுதலே சிறந்தது” என்றார் காந்திஜி.

கடந்த வாரத்தில் வாட்சப்பில், Suspended Coffee என்ற ஒரு காணொளி பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஒரு ஐரோப்பிய நாட்டின் நகரம் ஒன்றின் ஓர் உணவகத்தில், ஐந்து காப்பி, இரண்டு suspended என்று ஒரு பெண் கூறி, ஐந்து காப்பிக்குப் பணம் கட்டி, மூன்று காப்பி கப்புகளை மட்டும் வாங்கிக்கொண்டார். அடுத்து வந்த ஓர் இளைஞர், பத்து காப்பி, ஐந்து suspended என்று கூறி, பத்து காபிக்குப் பணம் செலுத்திவிட்டு ஐந்து காபி மட்டும் வாங்கிக் கொண்டார். பின்னால் வந்தவர் ஐந்து சாப்பாடு, இரண்டு suspended என்று கூறி, ஐந்திற்குப் பணம் செலுத்தி, மூன்றை மட்டும் வாங்கிச் சென்றார். அங்கு காப்பிக் குடிக்கச் சென்ற ஒரு சுற்றுலா இளைருக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை அங்கு அழைத்துச் சென்ற நண்பரிடம் இது பற்றி விளக்கம் கேட்டார். அப்போது அவர், சற்றுப் பொறுங்கள் என்றார். சிறிது நேரம் கழித்து ஒரு முதியவர் கிழிந்த ஆடைகளோடு counterஐ நெருங்கி, Any suspended coffee என்று கேட்டார். Counterல் இருந்த பெண் ஆம், என்று கூறிவிட்டு சூடான ஒரு கப் காப்பியை அந்த முதியவருக்குக் கொடுத்தார். குளிரிலும், பனியிலும் நடுங்கியபடியே இன்னொருவரும் அங்கு வந்து அவ்வாறே கேட்டார். அவருக்கும் ஒரு கப் காப்பி கொடுக்கப்பட்டது. அதைப் பார்த்த சுற்றுலா சென்றவர், என்ன ஒரு மனித நேயம். வறுமையில் வாடும் முகம் தெரியாதவர்களுக்கு, என்ன நேர்மையான உதவி என்று மெய் சிலிர்த்தார். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்தப் பழக்கம் நேபாள நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது எனச் சொல்லப்படுகின்றது. அன்பர்களே, பிறர் துன்பம் கண்டு மனம் கசியும் உள்ளத்தை நாமும் கொண்டிருப்போம். ஆதரவின்றி தெருக்களில் கைவிடப்பட்டவர்கள், வறட்சியால் வாடும் விவசாயிகள், பல கொடுமைகளுக்கு அஞ்சி, பிற இடங்களில் அடைக்கலம் தேடுவோர் என, நம் உதவிக்காக ஏங்குவோருக்கு, உதவிக்கரம் நீட்டுவோம். ஏழையருக்குச் செய்யும் உதவி, இறைவனுக்கே செய்வதாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.