2017-01-30 15:46:00

பாசமுள்ள பார்வையில்.. ஒரு தாய் உண்மையான மகிழ்ச்சி அடைவது எப்போது?


சோழ நாட்டின் பூம்புகாரில் வாழ்ந்துவந்த ஞானசீலர் என்பவர், கல்வியிலும்,  குணநலனிலும், தான தர்மத்திலும் சிறந்து விளங்கினார். அவருக்குப் பல ஆண்டுகள் கழித்து, ஒரு மகன் பிறந்தான். அவன் பிறந்த சில மாதங்களிலேயே அவர் உயிர் நீத்தார். குணசீலன் என்ற பெயர் கொண்ட அவன், தன் தந்தையைப் போலவே அனைத்திலும் சிறந்து விளங்கினான். ஞானசீலரின் மகன் என்பதால், அவனுக்கு ஊரில் மதிப்பும், மரியாதையும் கிடைத்தன. குருகுலத்திலும், அவனது அறிவுத் திறமையைக் கண்டு, ஞானசீலரின் மகனும் அறிவாளிதான் எனப் பெருமையாகப் பேசினர். ஆனால், தன் தாய், தன்னை ஒரு வார்த்தைகூட பாராட்டாமல் இருப்பது கண்டு குணசீலன் கவலை கொண்டான். குருகுலவாசத்துக்குப் பின், அவனுக்கு அரண்மனையில் பொறுப்பான பதவி கிடைத்ததால், அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. தன் தந்தையைப் போலவே, தான தர்மத்திலும் சிறந்து விளங்கினான். பூம்புகார் முழுவதும், அவனது அறிவுக்கூர்மை பற்றியும், தர்ம குணம் பற்றியும் பெருமையாக பேசப்பட்டது. ஒருமுறை, அரண்மனையில் தீர்க்க முடியாத சிக்கலை, தன் அறிவுக்கூர்மையால் தீர்த்து வைத்தான். இதைக் கேள்விப்பட்ட சோழ மன்னர், குணசீலனை நேரில் அழைத்து, தன் தந்தையின் அறிவுக்கூர்மையை குணசீலன் மிஞ்சிவிட்டதாக புகழ்ந்து பேசி பாராட்டினார். அப்போது ஆனந்தக் கண்ணீர் வடித்த அவனது தாய், தன் மகனின் நெற்றியில் முத்தமிட்டுப் பாராட்டினார். இதைக் கண்டு குழப்பம் அடைந்த குணசீலன், "சிறுவயதில் இருந்து என்னை அனைவரும் பாராட்டும்போது, நீங்கள் மட்டும் எதுவும் பேசாமல் இருந்தீர்கள். இப்போது மட்டும் பாராட்டுகிறீர்களே?" எனக் கேட்டான். அதற்கு பதிலளித்த அவனது தாய், "சிறுவயது முதலே உன் அறிவுக்கூர்மையைப் பார்த்து எல்லாரும் ஞானசீலரின் மகன் என்றே பாராட்டினார்கள். அப்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனால் அந்த பெருமை எல்லாம் உன் தந்தைக்கே சேரும். இன்று உன்னை, சான்றோன் என்றும், குணசீலனின் தந்தை, ஞானசீலர் என்றும் பாராட்டினார்கள். எனவேதான் இன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்றுதான் நான் உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறேன்" என ஆனந்தக் கண்ணீரோடு கூறினார். இதைதான் திருவள்ளுவரும், “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்” எனச் சொல்கிறார்.

ஒரு தாய், தனக்கு மகன் பிறக்கும்போது அடையும் மகிழ்ச்சியைவிட, அவனை அறிஞன் என்றும், நற்குணமுடையவன் என்றும் ஊரார் போற்றும்போது அதிக மகிழ்ச்சி அடைகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.