2017-01-30 16:14:00

ஆதிகாலத்தைவிட தற்போது மறைசாட்சிகளின் எண்ணிக்கை அதிகம்


சன.,30,2017. மறைசாட்சிகள் என்பவர்கள், திருஅவைக்கு முழு ஆதரவை, அன்றும் இன்றும் வழங்கி, திருஅவையை முன்னோக்கி எடுத்துச் செல்பவர்கள் என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

முதல் நூற்றாண்டுகளில் இருந்ததைவிட, தற்போது மறைசாட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, ஆனால், இன்றைய சமூகத் தொடர்புத்துறைக்கு அது ஒரு செய்தியாகவே தெரியவில்லை என்பதால், வெளியில் அதிகம் அறியப்படாமலேயே மறைசாட்சிய வாழ்வு தொடர்கிறது என்றார் திருத்தந்தை.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலய திருப்பலி மறையுரையில், சிலுவைக்காகவும், இயேசுவின் மீது தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தியதற்காகவும், இன்று எத்தனையோ கிறிஸ்தவர்கள் சிறையிலடைக்கப்பட்டு, சித்ரவதைகளை அனுபவித்து, அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர் என, இத்திங்கள் காலை, எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்றைய உலகில் பல சிறு திரு அவைகள், இயேசுவுக்காக துன்பங்களை அனுபவிப்பதும், அவைகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும், திரு அவையின் மகிமையாகவும், பலமாகவும் உள்ளது என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

தங்கள் வாழ்வை இழந்து, கிறிஸ்தவ வாழ்வின் சாட்சிகளாக விளங்கும் இன்றைய கிறிஸ்தவ மறைசாட்சிகளுக்காக இத்திருப்பலியை ஒப்புக்கொடுப்போம் என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.