2017-01-30 16:11:00

அகதிகளை வரவேற்க அமெரிக்க கர்தினால் வலியுறுத்தல்


சன.,30,2017. மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுதல், அனுமதியின்றி நுழைவோரை தடுப்புக் காவலில் வைத்தல், நாட்டை விட்டு வெளியேற்றுதல், புகலிடம் கொடுப்போருக்கு கடுமையான அபராதம் விதித்தல் போன்ற அமெரிக்க புதிய அரசுத்தலைவரின் அறிவிப்புகள் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் கர்தினால் Joseph Tobin.

பாதுகாப்புடன் வாழவும், பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெறவும், பாதுகப்பான எல்லைகளைக் கொண்டிருக்கவும், குடிமக்களுக்கு இருக்கும் உரிமைகளை புரிந்துகொள்ளும் அதேவேளை, மக்களின் பாதுகாப்பிற்கான கொள்கைகள் அறிவுபூர்வமானதாக இருக்கவேண்டும் என அரசிடம் விண்ணப்பிப்பதாகவும் கூறியுள்ளார், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Newark  பேராயர் கர்தினால் Tobin.

அனுமதியின்றி நாட்டிற்குள் நுழைந்துள்ள மக்களை, தடுப்புக் காவலில் வைப்பதும், வெளியேற்றுவதும், குடும்பங்களையும் சமூகங்களையும் பாதிக்கும் மனிதாபிமானமற்ற கொள்கைகள் என, தன் அறிக்கையில் கூறியுள்ள கர்தினால Tobin அவர்கள், இத்தகைய செயல்களால், சமூக நலன்தான் கெடுமேயொழிய, குடியேற்றதாரர்களின் எண்ணிக்கை குறையாது என தெரிவித்துள்ளார்.

கடந்த 260 ஆண்டுகளில் பிரான்ஸ், அயர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஹங்கேரி, வியட்நாம் நாடுகளின் மக்களையும், யூதர்களையும் வரவேற்றுள்ள அமெரிக்க ஐக்கிய நாடு, அதன் வழியாக பெரும்பலன் அடைந்துள்ளதென்பதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் Tobin.

ஆதாரம்: ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.