2017-01-28 14:25:00

பொதுக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


இந்த ஞாயிறும், இனிவரும் நான்கு ஞாயிறுகளும், இயேசு வழங்கும் சவால்கள் நிறைந்த போதனைகள், நம் ஞாயிறு வழிபாடுகளை வழிநடத்துகின்றன. மலைப்பிரசங்கம் மலைப்போதனை, மலைப்பொழிவு என்று, பலவாறாக அழைக்கப்படும் இந்தப் படிப்பினைத் தொகுப்பினை, ஐந்து ஞாயிறு வழிபாடுகளில் தொடர்ந்து சிந்திக்க, இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாய்ப்பிற்காக, நன்றி சொல்வோம். இந்த மலைப்பொழிவின் துவக்கத்தில், 'பேறுபெற்றோர்' என்று இயேசு கூறும் ஆசிமொழிகள், இன்றைய நற்செய்தியாக வந்தடைந்துள்ளன. இப்பகுதியை நாம் அடிக்கடி கேட்டு, சந்தித்திருக்கிறோம். எனவே, இன்றைய சிந்தனைக்கு நாம் இரு எண்ணங்களை முன்வைப்போம். இயேசு மலை மீது அமர்ந்ததையும், அவர் வறியோரை வாழ்த்தி வழங்கிய ஆசி மொழிகளையும் நம் சிந்தனைகளின் மையமாக்குவோம். "இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர்ந்தார்" (மத். 5:1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. மலையைப் பற்றிய சிந்தனைகளுடன் நாம் துவங்குவோம்.

மலை... உடலிலும், மனதிலும், மாற்றங்களை உருவாக்கும் அற்புத இடம். மலை முகடுகளைச் சூழ்ந்திருக்கும் அமைதி, மலைப்பகுதிகளில் வீசும் தூய்மையான காற்று, அங்கு நிலவும் குளிர் ஆகியவை, நம்மில் புத்துணர்வை உருவாக்கும். மேலும், மலை மீது நிற்கும்போது, நமது பார்வை, பரந்து விரிந்ததாக மாறும். அமைதி, தூய்மை, புத்துணர்வு, பரந்து விரிந்த பார்வை, என்ற உன்னத அம்சங்களைக் கொண்டிருப்பதால், மலைகள், இறைவனின் இருப்பிடங்களாக, பல மதங்களில் கருதப்படுகின்றன.

இறைவன் உருவாக்கியதாக, தொடக்க நூலில் சொல்லப்பட்டுள்ள ஏதேன் தோட்டத்தைப் பற்றி, Evan Eisenberg என்பவர் எழுதிய "The Ecology of Eden" அதாவது, ‘ஏதேனின் இயற்கைச்சூழல்’ என்ற நூலில், 'மலைக் கலாச்சாரம்' 'கோபுரக் கலாச்சாரம்' என்று இருவகைக் கலாச்சாரங்களைப் பற்றி பேசுகிறார். இறைவன் வழங்கியுள்ள படைப்பை மதித்து, அந்தப் படைப்புடன் ஒன்றித்து வாழ்ந்து வருவது, ‘மலைக் கலாச்சாரம்’.

இதற்கு மாறுபட்டிருப்பது, ‘கோபுரக் கலாச்சாரம்’. மலையை, கடவுளின் படைப்பாக, இறைவனின் உறைவிடமாகப் பார்த்து இரசிப்பதற்குப் பதில், தான் கட்டவிருக்கும் கோபுரத்திற்குத் தேவையான மூலப் பொருள்களான மண், கல் ஆகியவை இருக்கும் ஒரு கிடங்காக, அந்த மலையைப் பார்க்கும் ஒரு பார்வை இது. இயற்கையுடன் ஒன்றித்து வாழாமல், இயற்கையைப் பகைத்து, இயற்கையை அடக்கி ஆள, இயற்கையை வெல்ல, இயற்கைச் செல்வங்கள் அனைத்தையும் தன் சுயநலனுக்கெனப் பயன்படுத்தி, தன் பெருமையை நிலைநாட்ட, கோபுரங்களைக் கட்டும் கலாச்சாரம் இது. 'கோபுரக் கலாச்சாரத்'தில் சிக்கிய மனிதர்கள் 'பாபேல் கோபுரம்' கட்டியதைப்பற்றி தொடக்க நூலில் (பிரிவு 11) வாசித்திருக்கிறோம். கோபுரக் கலாச்சாரத்தின் அடையாளங்களான, கோபுரங்கள் வளர, வளர... அந்தக் கோபுரங்களுக்கு, மண், கல், இவற்றைத் தந்த மலைகள், காணாமல் போய்விடும். அந்த மலைகளோடு சேர்ந்து, இறைவனும் காணாமற் போய்விடுவார். கடவுள், இந்தக் கலாச்சாரத்தில் காணாமற் போய்விடுவதால், உருவாக்கப்பட்ட பொருட்களையே கடவுளென நினைத்து, மனிதர்கள் வழிபட ஆரம்பித்துவிடுவர்.

மலைமீது அமர்ந்த இயேசு, தன் போதனைகளை, ஆசி மொழிகளுடன் ஆரம்பிக்கிறார். அவர் ஆசீரால் நிறைந்தவர் என்பதால், அவர் இவ்வுலகில் வாழும் அனைவரையும், குறிப்பாக, இவ்வுலகில் துயரங்களைச் சந்திப்போரை, ஆசீர்வதித்து, தன் படிப்பினைகளைத் துவங்குகிறார். ஆசி வழங்குவது, இயேசுவுக்கு, இயல்பாக அமைந்த ஒரு பண்பு. இத்தகையப் பண்பு, ஆசீர் நிறைந்த ஒரு மனதிலிருந்துமட்டுமே வெளிவரக்கூடும். இதைப் புரிந்துகொள்ள, புத்தமதத்தில் கூறப்படும் ஓர் உவமை உதவியாக இருக்கும்.

ஒருநாள், புத்தர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அழகும், உடல் கட்டமைப்பும் கொண்ட ஒரு படைவீரர் அவ்வழியே வந்தார். குண்டாக, அதிக எடையுடன் அமர்ந்திருந்த புத்தரைப் பார்த்த அந்த வீரர், "உம்மைப் பார்த்தால், ஒரு பன்றியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். புத்தர் அமைதியாக அந்த வீரரைப் பார்த்து, "உம்மைப் பார்த்தால், ஒரு தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார்.

இந்தக் கூற்றை சற்றும் எதிர்பார்க்காத அந்த வீரர், "என்னைப் பார்த்தால், தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று எப்படி சொன்னீர்?" என்று கேட்டார். புத்தர் மறுமொழியாக, "நாம் உண்மையிலேயே, வெளி உலகை, வெளியிலிருந்து பார்ப்பது கிடையாது. நமக்குள் இருப்பனவற்றைக் கொண்டு, வெளி உலகைப் பார்க்கிறோம். நான் இந்த மரத்தடியில் அமர்ந்து இறைவனைத் தியானித்து வருகிறேன். எனவே, நான் காண்பதனைத்திலும் இறைவனைக் காண்கிறேன். நீரோ, வேறு பலவற்றை சிந்தித்துக் கொண்டிருப்பதால், வேறு விதமாகப் பார்க்கிறீர்" என்று அமைதியாகக் கூறினார்.

இவ்வுலகைப்பற்றி, பிறரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் சிந்தனைகள், கண்ணோட்டம் அனைத்தும் நமக்கு உள்ளிருந்து உருவாகின்றன. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, ஆசீர் பெற்ற ஒரு மனநிலையா, அல்லது, சபிக்கப்பட்ட ஒரு மனநிலையா என்பதை ஆய்வு செய்வது நல்லது. ஆசீர் பெற்ற மனநிலை, அனைவரையும், அனைத்துலகையும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் காணும். சபிக்கப்பட்ட மனநிலையோ, அனைத்தின் மீதும் சாபங்களை அள்ளி வீசும். நம்மில் பலர், நமக்கு வந்துசேரும் ஆசீர்களை அலட்சியம் செய்துவிட்டு, அவ்வப்போது வரும் துயரங்களை நம் சாபங்களாக பெரிதுபடுத்துவதால், பெரும்பாலான நம் வாழ்வு சபிக்கப்பட்ட மனநிலையிலேயே கழிகிறது.

இயேசுவின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும், ஆசீர் பெற்ற மனநிலையிலிருந்து வெளிவந்தவை. அவர் இவ்வுலகில் மனிதராகப் பிறக்கப்போகிறார் என்ற அற்புதச் செய்தியை, இளம்பெண் மரியாவிடம் பகிரவந்த கபிரியேல் தூதர், மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். அவரைச் சந்தித்த உறவினர் எலிசபெத்து, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக். 1:42) என்று மனநிறைவான ஆசி வழங்கினார்.

இவ்வாறு, கருவில் தோன்றியதுமுதல், ஆசீரால் நிரப்பப்பட்ட இயேசு, தன் பணிவாழ்வைத் துவங்கிய வேளையிலும், ஆசீரால் நிரப்பப்பெற்றார். "நீரே என் அன்பார்ந்த, - ஆசி பெற்ற - மகன்" (காண்க - லூக். 3:22) என்று இறைத்தந்தையின் ஆசீரால் நிரப்பப்பெற்றார், இயேசு. ஆசீரால் நிறைந்து வழிந்த இயேசு, தன் மலைப்பொழிவை, ஆசீர்வாதங்களுடன் ஆரம்பித்தார். 'பேறுபெற்றோர்' அதாவது, 'ஆசி பெற்றவர்' என்று இயேசு மலை மீது முழங்கிய கூற்றுகள், உலகப் புகழ்பெற்றவை::

மத்தேயு 5 3-10

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; துயருறுவோர் பேறுபெற்றோர்; கனிவுடையோர் பேறுபெற்றோர்; நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்...

மலைமீது அமர்ந்து, இயேசு கூறிய இந்த ஆசி மொழிகள், மலைக் கலாச்சாரத்தில் வாழ்வோரை மையப்படுத்தி சொல்லப்பட்ட ஆசி மொழிகள். இறைவனைச் சார்ந்து, இயற்கையைப் போற்றி வாழும் வறியோர், பேறுபெற்றோர், ஆசி பெற்றோர் என்று இயேசு கூறியுள்ளார். 'கோபுர கலாச்சார'த்தைச் சேர்ந்த மக்கள், இந்த ஆசி மொழிகளைக் கேட்கும்போது, இயேசுவை எள்ளி நகையாடக்கூடும். அவர்களைப் பொருத்தவரை, ஏழையரின் உள்ளத்தினர் அல்ல, செல்வத்தால் நிறைக்கப்பட்டவர்கள், செல்வத்தை கடவுளாக வழிபடும் உள்ளத்தினர் பேறுபெற்றோர்.

'பேறுபெற்றோர்' என்று இயேசு கூறிய ஆசி மொழிகள், பல்லாயிரம் உள்ளங்களில் உன்னத எண்ணங்களை விதைத்துள்ளன. அந்த உன்னத மனிதர்களில் ஒருவர், மகாத்மா காந்தி. விவிலியத்தில் காந்தியைக் கவர்ந்த 'பேறுபெற்றோர்' பகுதி, சனவரி 29, இஞ்ஞாயிறன்று தரப்பட்டுள்ளதை ஒரு பொருத்தமான நிகழ்வாக நாம் காணலாம். இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், ஆகியோரை வரிசைப்படுத்தி, வன்முறையற்ற அகிம்சை வழியை, இம்மலைப்பொழிவில் ஆணித்தரமாக அறிவித்துள்ள இயேசுவை, தன் மானசீகத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் காந்தி. அவரைப் போலவே, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ ஆகியோரையும் அதிகம் கவர்ந்த 'பேறுபெற்றோர்' பகுதி, அவர்களை அகிம்சை வழியில் துணிவுடன் செல்ல வழி வகுத்தது. அகிம்சை வழியை உலகில் வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தி அவர்கள், வன்முறையாளர் ஒருவரின் குண்டுக்குப் பலியானதை, சனவரி 30ம் தேதி, திங்களன்று நினைவு கூர்கிறோம்.

'பேறுபெற்றோர்' என்று இயேசு வழங்கிய ஆசி மொழிகள், கடந்த 20 நூற்றாண்டுகளாக இன்னும் பல வடிவங்களில், ஆசி மொழிகளாக வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு, நவம்பர் முதல் தேதி, அனைத்து புனிதர் திருநாளன்று, சுவீடன் நாட்டில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றைய நற்செய்தியில் இடம்பெற்றிருந்த ‘பேறுபெற்றோர்’ பகுதியை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார். அவ்வேளையில், இன்றையச் சூழலுக்கு ஏற்றதுபோல், மேலும் ஆறு பேறுபெற்றோர் ஆசிகளை திருத்தந்தை இணைத்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைத்த, இந்தப் புதிய ஆறு ஆசிமொழிகளுடன், இன்றைய சிந்தனைகளை நாம் நிறைவு செய்வோம்:

தங்கள் மேல் பிறர் சுமத்தும் தீமைகளை பொறுத்துக்கொண்டு, அவர்களை மனதார மன்னிப்போர், பேறுபெற்றோர்.

கைவிடப்பட்டோர், மற்றும் சமுதாயத்தின் ஓரங்களில் ஒதுக்கப்பட்டோரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, அவர்களுடன் தங்கள் அருகாமையை உணர்த்துவோர், பேறுபெற்றோர்.

ஒவ்வொரு மனிதரிலும் இறைவனைக் காண்போரும், அவ்வாறு கண்ட இறைவனை, மற்றவர்கள் காணவும் முயற்சிகள் மேற்கொள்வோரும், பேறுபெற்றோர்.

நமது பொதுவான இல்லமான இப்பூமியைப் பாதுகாத்து, பேணி வருவோர், பேறுபெற்றோர்.

அடுத்தவருக்கு உதவும் நோக்கத்தோடு, தங்கள் சுகங்களைத் துறப்போர், பேறுபெற்றோர்.

கிறிஸ்தவர்களின் முழுமையான ஒன்றிப்புக்கென செபிப்போர், உழைப்போர், பேறுபெற்றோர்.

இவர்கள் அனைவரும் இறைவனின் இரக்கத்திற்கும், கனிவிற்கும் தூதர்களாய் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் விருதை நிச்சயம் பெறுவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.