2017-01-28 15:42:00

பிரிட்டன் சிறைகளில் சீர்திருத்தம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்


சன.28,2017. பிரிட்டன் சிறைகளில் இடம்பெறும் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு, சிறை குறித்த சீர்திருத்த நடவடிக்கைகள், இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என, அந்நாட்டு ஆயர்கள், அரசை விண்ணப்பித்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சிறைகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை குறித்து, பிரிட்டன் நீதித்துறை, இவ்வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையையொட்டி, சிறை சீர்திருத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆயர்கள்.

2016ம் ஆண்டில், 119 கைதிகள் தற்கொலை செய்துகொண்டனர், 37,784, தங்களையே துன்புறுத்தி காயப்படுத்திக் கொண்டனர், 25,049 கைதிகள், தாக்குதல்களால் காயமுற்றனர் என, நீதி அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரங்கள், அதிர்ச்சியைத் தருகின்றன என்று, அந்நாட்டு ஆயர் Richard Moth அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிறைப் பணியாளர் பற்றாக்குறை, சிறைகளில் கொள்ளவுக்குமேல் கைதிகளின் எண்ணிக்கை போன்ற முக்கிய விவகாரங்களைச் சுட்டிக்காட்டியுள்ள ஆயர் Moth அவர்கள், சிறை குறித்த சீர்திருத்த நடவடிக்கைகள், இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.