2017-01-27 16:09:00

யூத இனப் படுகொலை கற்றுத்தரும் பாடம்


சன.27,2017. கடந்த காலத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை, ஒருபோதும் மறக்கக் கூடாது என்று, OSCE என்ற, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவையின், திருப்பீடப் பிரதிநிதியான, பேரருள்திரு Janusz Urbanczyk அவர்கள் கூறினார்.

OSCE அவையின் நிலைத்த குழுவில், இவ்வியாழனன்று உரையாற்றிய, பேரருள்திரு Urbanczyk அவர்கள், மனித மாண்பு மற்றும், அமைதியைப் பாதுகாப்பதில், உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்கு, நாம் எப்போதும் விழிப்பாயிருக்க வேண்டுமென்று, யூத இனப் படுகொலை, பாடம் கற்றுத்தந்துள்ளது என்று கூறினார்.

நாத்சி மரண வதை முகாமில் நடத்தப்பட்ட கொடுமைகள், இன்றும், நம்மைச் சுற்றி இடம்பெறுகின்றன என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேரருள்திரு Urbanczyk அவர்கள், உலக யூத இனப் படுகொலை நினைவு நாள், வேறுபாடுகள் மற்றும், தீமைகளைக் கடந்து சிந்திப்பதற்கு நமக்கு உதவ வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய நம் உலகில், அமைதி மற்றும், நம்பிக்கையைக் கொணருவதற்குத் தேவையான, எல்லா வழிகளையும் திறப்பதற்கும், இந்த உலக நாள் நமக்கு உதவ வேண்டும் என, மேலும் தெரிவித்தார், பேரருள்திரு Urbanczyk.

Auschwitz, Birkenau ஆகிய மரண முகாம்களில் நடந்த அட்டூழியங்கள் முடிவுறவில்லை, இன்றும், நம்மைச் சுற்றி, இவைபோன்ற கொடூரங்கள் நடக்கின்றன எனவும் கூறிய, பேரருள்திரு Urbanczyk அவர்கள், யூத இன விரோதப்போக்கு போன்ற நடவடிக்கைகள், இல்லாத ஓர் உலகை அமைப்பதற்கு, மனித சமுதாயம் முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.