2017-01-27 16:23:00

டிரம்ப்பின் எல்லைச் சுவர் திட்டம் - மெக்சிகோ ஆயர்கள் கண்டனம்


சன.27,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், மெக்சிகோ நாட்டிற்கும் இடையே சுவர் எழுப்பும் பணிக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து, தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், மெக்சிகோ ஆயர்கள்.

டிரம்ப் அவர்களின் இந்த ஒப்புதல் குறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள, மெக்சிகோ ஆயர்கள், இவ்விரு நாடுகளுக்கும் இடையே சுவர் எழுப்புவதால், ஏராளமான மக்கள், தங்கள் குடும்பங்கள், வேலைகள், விசுவாசம் மற்றும், நட்புகளை இழக்க வேண்டியிருக்கும் என்று, எச்சரித்துள்ளனர்.

எல்லைச் சுவரைக் கட்டுவதற்குப் பதிலாக, பாதுகாப்பையும், வேலைவாய்ப்பையும் உருவாக்குவது குறித்து சிந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ள ஆயர்கள், மெக்சிகோ வழியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்லும், மத்திய மற்றும், தென் அமெரிக்க மக்களுக்கு, தங்களின் ஆதரவைத் தொடர்ந்து வழங்கவிருப்பதாகவும், உறுதி கூறியுள்ளனர்.

மேலும், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நடவடிக்கைகள் சில மாதங்களில் தொடங்கும் என்றும், இதற்கான முழுச் செலவையும் மெக்சிகோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ட்ரம்ப் அவர்கள், இப்புதனன்று கையெழுத்திட்ட  அரசாணைகளில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கூறிய மெக்சிகோ அரசுத்தலைவர் பெனா நீயடோ அவர்கள்,  எல்லையில் அமெரிக்கா சுவர் எழுப்புவதற்கு தாங்கள் பணம் அளிக்கமாட்டோம் எனவும், அமெரிக்காவில் வாழும் மெக்சிகோ மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், சுவர் எழுப்பும் அமெரிக்காவின் முடிவை நிராக்கரிகின்றேன் எனவும் கூறினார்.

மேலும், அமெரிக்காவில், வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்பது, வெள்ளை மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், மெக்சிகோ அரசுத்தலைவர் நீயடோ.

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.