2017-01-27 15:53:00

கத்தோலிக்கரும்,ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரும் அமைதிக்காக உழைக்க


சன.27,2017. எங்கெங்கு வன்முறையும், கலவரமும் நிலவுகின்றனவோ, அங்கெல்லாம், நல்லிணக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கு, கிறிஸ்தவர்கள் பொறுமையோடு உழைப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.    

பன்னாட்டு, கத்தோலிக்க-கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகள் குழுவின் 31 பேரை, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

இக்குழுவினர், இவ்வாரத்தில், வத்திக்கானில், நடத்திய கூட்டத்தில், கீழை வழிபாட்டு முறையின் தொன்மைமிக்க ஏழு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இச்சபைகள், ஐந்தாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து, கிறிஸ்தவ உலகத்திலிருந்து பிரிந்து செயல்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.  

இக்குழுவினருக்கு உரையாற்றிய திருத்தந்தை, பல கிறிஸ்தவ சபைகள், அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கொடூரங்களை, ஒவ்வொரு நாளும் பார்த்து வருகின்றனர் என்றும், வறுமை, அநீதி மற்றும், சமூகத்தால் ஓரங்கட்டப்படுதல் சூழல்களால், கொடூரத் துன்பங்களை மக்கள் அனுபவிக்கின்றனர் என்றும், தெரிவித்தார்.

கிறிஸ்தவத் தலைவர்களுடன் இணைந்து தானும் அமைதிக்காகச் செபிப்பதாகவும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவைக்குள் முழு ஒன்றிப்பின் அடையாளமாகத் திகழ்கின்ற, எல்லாரும் ஒரே பீடத்தில், ஆண்டவரின் திருப்பலியைக் கொண்டாடும் அருளைப் பெறுவதற்கு, நம்மிடமுள்ள ஆவலை நிறைவேற்ற, கத்தோலிக்க- கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுக்கு இடையே இடம்பெறும் உரையாடல்கள் வழியமைக்கும் என, தான் நம்புவதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற கலந்துரையாடல்களில், திருநற்கருணை பற்றிய, வரலாற்று, இறையியல் மற்றும் திருஅவைக் கூறுகள் குறித்து, இக்குழுவினர் சிந்தித்தது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தில் முன்னோக்கிச் செல்வதற்கு, இக்குழுவினர் ஆற்றும் பணிகளை ஊக்கப்படுத்தினார்.

கிறிஸ்துவுக்கு வீரத்துடன் சாட்சியம் பகர்ந்த, எண்ணற்ற மறைசாட்சிகள் மற்றும் புனிதர்களின் எடுத்துக்காட்டினாலும், பரிந்துரையினாலும், கிறிஸ்தவச் சமூகங்கள், தொடர்ந்து உயிரூட்டம் பெறட்டும் என வாழ்த்திய திருத்தந்தை, இயேசுவின் திருத்தூதர்களாகிய நாம் எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், கிறிஸ்தவ மனஉறுதியோடு, சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம் எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.